ஞானவாபியை அடுத்து, மத்தியப் பிரதேசத்தில் உள்ள தார் போஜ்சாலா மசூதியில் ஆய்வு நடத்த தொல்லியல் துறை முடிவு
வாரணாசியின் ஞானவாபி மசூதியில் நடந்த ஆய்வை அடுத்து, மற்றொரு சர்ச்சைக்குரிய இரு மதங்களுக்கு சொந்தமான இடத்தை இந்திய தொல்லியல் துறை ஆய்வு செய்ய உள்ளது. மத்தியப் பிரதேசத்தின் தார் என்ற இடத்தில் உள்ள போஜ்சாலாவில் தான், ஆய்வு நடத்தப்பட உள்ளது. தார் போஜ்சாலா மசூதி இருக்கும் இடத்தில் இதற்கு முன் கோவில் இருந்ததற்கான தடையங்கள் இருந்தால் அங்கு தினமும் வழிபாடு செய்ய அனுமதி வழங்குமாறு வலதுசாரிக் குழுவான இந்து முன்னணி மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தது. அந்த மனுவை இன்று விசாரித்த மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் இந்தூர் பெஞ்ச், போஜ்சாலாவில் ஆய்வு நடத்த இந்திய தொல்லியல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
கட்டிடத்தின் வயதைக் கண்டறிய உத்தரவு
இந்து-இஸ்லாம் ஆகிய இரண்டு மதங்கள் தொடர்புடைய சர்ச்சைக்குரிய ஒரு இடத்தை தொல்லியல் துறை ஆய்வு செய்வது இது நான்காவது முறையாகும். இதற்கு முன்னதாக அயோத்தி, வாரணாசி மற்றும் மதுரா ஆகிய இடங்களில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தி இருக்கிறது. "ஆய்வை முடிக்கவும். புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுக்கப்பட வேண்டும். அடுத்த விசாரணையின் போது ஏப்ரல் 29க்கு முன் அறிக்கையை நீதிமன்றத்தில் வழங்க வேண்டும்" என்று நீதிபதிகள் எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் தேவ் நாராயண் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது. அந்த கட்டிடத்தின் வயதைக் கண்டறிய தரை ஊடுருவல் ரேடார் அமைப்பு, கார்பன் டேட்டிங் உள்ளிட்ட அனைத்து முறைகளையும் அதிநவீன உபகரணங்களையும் பயன்படுத்தும்படி ASIயிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.