சாதிய ஒடுக்குமுறையைத் ஒழிக்க ஒரு சமத்துவ பொங்கல்!
பட்டியலின மக்கள் குடிக்கும் குடிநீரில் மனித கழிவுகளைக் கலந்த கொடூரமான சம்பவத்திற்குப் பிறகு, புதுக்கோட்டையில் உள்ள இறையூர் கிராமம் சமதுவத்துவத்தை நோக்கி ஒரு அடியை எடுத்து வைத்திருக்கிறது. புதுக்கோட்டை இறையூர் கிராமக் கோவிலுக்குள் பல தலைமுறைகளாக பட்டியலின மக்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த தீண்டாமையை ஒழிக்கும் விதமாக அமைச்சர் மெய்யநாதன் மற்றும் புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு ஆகியோர் அந்த ஊர் பட்டியலின மக்களை கோவிலுக்குள் அழைத்து சென்றிருக்கின்றனர். "முதல்முறையாக மூன்று ஜாதியினரும் சேர்ந்து பூஜை செய்வதாலும் கலெக்டர் கோவிலுக்குள்ளே எங்களை அழைத்து சென்றதாலும் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் உரிமையை மட்டும் தான் கேட்கிறோம், வேறு யாருடைய சொத்தையும் நாங்கள் கேட்கவில்லை," என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார் கிராமவாசி லதா.
சமத்துவ பொங்கல்:
தேங்காய் உடைத்து ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து கோவிலுக்குள் பிரார்த்தனை செய்தனர். கோவிலில் அனைத்து ஜாதியினரும் இணைந்து பூஜை நடத்துவதை உள்ளூர் நிர்வாகம் உறுதி செய்தது. மேலும், ஊரில் வசிக்கும் மூன்று சமுதாய மக்களும் சமத்துவதுடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் வருவாய்த்துறையினரும் ஆதி திராவிட நலத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு மேள தாளத்துடன் மக்களை கோவிலுக்குள் அழைத்து சென்றனர். இந்த விழாவிற்காக கோவில் அலங்கரிக்கப்பட்டு விழா கோலம் பூண்டது. இதில் கலந்து கொள்வதற்கு பல்வேறு ஊர்களில் இருந்து மக்கள் வந்திருந்தனர்.