42 நாட்கள் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்; பிறகு மீண்டும் பணிக்குத் திரும்பினர் மேற்குவங்க மருத்துவர்கள்
42 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு இன்று (செப்டம்பர் 21) காலை மேற்கு வங்கத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் ஜூனியர் டாக்டர்கள் ஓரளவுக்கு மீண்டும் பணியில் சேர்ந்தனர். ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பணியில் இருந்த பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து அவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஜூனியர் டாக்டர்கள் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மீண்டும் தங்கள் பணியில் சேர்ந்தனர். ஆனால் வெளிநோயாளர் பிரிவில் இன்னும் பணியில் சேரவில்லை. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜூனியர் மருத்துவர் ஒருவர் கூறுகையில், அத்தியாவசிய மற்றும் அவசர சேவைகளில் மட்டுமே பணிக்கு திரும்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் அபயா கிளினிக்
இதற்கிடையே, மாநிலத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்களுக்கு மருத்துவ சேவையாற்றுவதற்காக, பல்வேறு ஜூனியர் டாக்டர்களும் அபயா கிளினிக்குகள் எனும் மருத்துவ முகாம்களை தொடங்க உள்ளதாக அந்த அஜூனியர் மருத்துவர் மேலும் கூறினார். தொடர்ந்து எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் பொது சுகாதாரத்தில் தங்கள் அர்ப்பணிப்பை அவர்கள் வெளிப்படுத்துவார்கள் என்று அவர் கூறினார். உயிரிழந்த மருத்துவருக்கு நீதி கோரியும், மாநில சுகாதாரத்துறை செயலரை பதவி நீக்கம் கோரியும் நிர்வாகம் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற இன்னும் 7 நாட்கள் காத்திருப்பதாகவும் இல்லையேல் மீண்டும் முழு வேலைநிறுத்தத்தைத் தொடங்குவோம் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே, இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, ஆர்ஜி கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் உட்பட பலரை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.