ரவீந்திரநாத் வெற்றி செல்லாது : மக்களவையில் ஒரு எம்பி கூட இல்லாத கட்சியாக மாறிய அதிமுக
தேனி பாராளுமன்ற தொகுதியின் எம்பியான ஓ.பி.ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றியை சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை (ஜூலை 6) ரத்து செய்தது. 2019இல் அதிமுக சார்பில் தேனி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட ஓ.பி.ரவீந்திரநாத், தன்னை எதிர்த்து போட்டியிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனை சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார். இதற்கு எதிராக ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், நீதிபதி எஸ்.எஸ். சுந்தர் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளார். இந்த தீர்ப்பில் தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது ஓபிஎஸ் தரப்புக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதற்கிடையே, 2019 தேர்தலில் தமிழகத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற ஒரே வேட்பாளர் இவர்தான் என்பதால், மக்களவையில் அதிமுகவின் எம்பி எண்ணிக்கை பூஜ்யமாகியுள்ளது.
உண்மை தோற்பதில்லை : ஈவிகேஎஸ் இளங்கோவன் கருத்து
சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்றுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன், உண்மை தோற்பதில்லை என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு எனக் கூறியுள்ளார். மேலும், "சிலர் எதையும் செய்தாவது தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என கணக்கு போடுகிறார்கள். ஆனால் இறுதியில் இப்படித்தான் தீர்ப்புகள் வரும். இதை தாங்கிக்கொள்ளும் பக்குவம் அவர்களுக்கு வரவேண்டும்." எனத் தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பை காங்கிரஸ் மற்றும் திமுகவினர் வரவேற்று வரும் நிலையில், ஓபிஎஸ் தரப்பு கடும் அதிர்ச்சியடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என நீதிமன்றம் அறிவித்தாலும், அவர் மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக 30 நாட்களுக்கு தீர்ப்பை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கூறியுள்ளது.