நாளை கூடும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - கூட்டணி குறித்த முடிவு எடுக்கப்படுமா?
அண்மை காலங்களில் பாஜக-அதிமுக'வினர் இடையே தொடர்ந்து பிரச்சனைகள் நடந்து வரும் நிலையில், நாளை(செப்.,25) அதிமுக'வின் அனைத்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடக்கவுள்ளது. இது குறித்து அதிமுக தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய திராவிட முன்னேற்ற கழகத்தின் செயலாளர் மற்றும் எதிர்க்கட்சி தலைவருமான திரு. எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் தலைமையில் நாளை எம்ஜி.ஆர். மாளிகையில் மாலை 4 மணியளவில் தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் ஆலோசனை கூட்டம் நடக்கவுள்ளது. இதில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படும் நிலையில், கூட்டணி குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை' - ஜெயக்குமார்
முன்னதாக, பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பேரறிஞர் அண்ணா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்து பேசியிருந்தார். இதற்கு அவரை மன்னிப்பு கேட்கப்படும்படி கூறியபொழுது அவர் முடியாது என மறுத்துவிட்டார். இதனிடையே, இதுகுறித்து முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், "நாங்கள் தெய்வமாக வழிபடும் அண்ணாவை அவதூறு பேசியதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. பாஜக'வால் இங்கு ஒருபோதும் காலூன்ற முடியாது. எங்களை வைத்துதான் அவர்களுக்கு இங்கு அடையாளமே" என்று ஆவேசமாக பேசியுள்ளார். மேலும் அவர் இன்று(செப்.,24), 'அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. இதில் மாற்று கருத்து எதுவும் இல்லை' என்று திட்டவட்டமாக கூறி பேட்டியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.