ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டி - ஓபிஎஸ் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் வெற்றிபெற அரசியல் கட்சிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். திமுக சார்பில் காங்கிரஸ் கட்சியினர் போட்டியிடுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக போட்டியிடும் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்த நிலையில் ஓபிஎஸ் ஏதும் அறிக்கை அளிக்காமல் இருந்தார். இந்நிலையில் அவர் தற்போது, இந்த இடைத்தேர்தலில் பா.ஜ.க., ஆதரவை கோர அதிமுக முடிவு செய்துள்ளது என்றும், இது குறித்து பா.ஜ.க., தலைவர்களை சென்னையில் அதிமுக நிர்வாகிகள் சந்தித்து பேச உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். இரட்டை இலை சின்னத்தை பெற தங்களுக்கு தான் முழு உரிமை உள்ளது என்றும் ஓபிஎஸ் கூறியுள்ளார்.
ஈபிஎஸ் தரப்புடன் ஒருங்கிணைந்து செயல்பட பேச்சுவார்த்தைக்கு தயார் - ஓபிஎஸ்
மேலும், 'ஒருங்கிணைப்பாளராக நான் தொடருகிறேன். 2026ம் ஆண்டு வரை அதிமுக சார்பில் போட்டியிட முழுஉரிமை உள்ளது. இரட்டை இலை சின்னம் கோரி ஏ மற்றும் பி படிவத்தில் கையெழுத்திடுவேன்' என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கூட்டணி கட்சிகள் தங்களுடன் தொடர்ந்து பேசுவதாகவும், பா.ஜ.க. போட்டியிட விரும்பினால் ஆதரவு அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார். தொடர்ந்து, பல்வேறு அணிகளாக பிரிந்து கிடக்கும் அதிமுக ஒன்றிணையவேண்டும். ஈபிஎஸ் தரப்புடன் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்த பேச்சுவார்த்தைக்கு இப்போதும் தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இரட்டை இலை சின்னம் முடங்க தான் ஒருபோதும் காரணமாக இருக்கபோவதில்லை என்றும் அவர் உரைத்துள்ளார். இறுதியாக, இடைத்தேர்தலில் தங்கள் தரப்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.