அதிக விமான நிலையங்களை ஏலம் எடுக்க இருக்கும் அதானி குழுமம்
அதானி குழுமத்தின் ஒரு அங்கமான அதானி ஏர்போர்ட்ஸ், முன்னணி விமான நிலைய ஆபரேட்டராக மாறும் நோக்கதோடு, நாட்டில் உள்ள அதிக விமான நிலையங்களை ஏலம் எடுக்கவுள்ளது. இந்த தகவலை அதானி ஏர்போர்ட்ஸின் தலைமை செயல் அதிகாரி அருண் பன்சால் இன்று(மார் 22) தெரிவித்தார். விமான நிலைய தனியார்மயமாக்கலின் போது, ஆறு விமான நிலையங்களை அதானி ஏர்போர்ட்ஸ் ஏலம் எடுத்தது. அடுத்த சில ஆண்டுகளில், இந்தியா மேலும் ஒரு டஜன் விமான நிலையங்களை தனியார்மயமாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏலத்தில், அதானி ஏர்போர்ட்ஸ் பங்கேற்கும் என்று பன்சால் கூறியுள்ளார்.
விமானப் போக்குவரத்து நிறுவனத்தை அமைப்பதில் ஈடுபட்டு வரும் அதானி குழுமம்
அதானி ஏர்போர்ட்ஸ், இந்தியாவில் நன்றாக இயங்கி கொண்டிருப்பதாகவும், அதனால் இன்னும் நிறைய விமான நிலையங்களை இயக்க விரும்புவதாகவும் அருண் பன்சால் தெரிவித்திருக்கிறார். முதற்கட்டமாக, நவி மும்பை விமான நிலையம் டிசம்பர் 2024க்குள் செயல்படத் தொடங்கும் என்றும், நவி மும்பை விமான நிலையத்தின் முதல் கட்டத்தின் போது 20 மில்லியன் பயணிகளை கையாளும் திறன் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். அதானி ஏர்போர்ட்ஸ், விமானப் போக்குவரத்து நிறுவனத்தை அமைப்பதில் ஈடுபட்டு வருவதாக பன்சால், விமானப் போக்குவரத்து மைய உச்சிமாநாட்டில் பேசுகையில் கூறி இருந்தார். வரும் வருடங்களில், விமான நிலையத்தை பராமரிக்கும் செலவு 30-40% குறையும் என்பதையும் அவர் அப்போது தெரிவித்தார்.