அதானி-ஹிண்டன்பர்க் வழக்கு: செபி விசாரணையை மாற்ற எந்த காரணமும் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு
அதானி-ஹிண்டன்பர்க் வழக்கில், பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின்(செபி) விசாரணையில் தலையிட மறுத்துள்ள உச்ச நீதிமன்றம், வழக்கை சிறப்பு புலனாய்வு குழுவிற்கு மாற்ற முகாந்திரம் இல்லை என தெரிவித்துள்ளது. அதானி குழுமத்திற்கு எதிரான அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகள் தொடர்பான பல மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், இன்று அதில் நான்கு மனுக்கள் மீது தீர்ப்பளித்துள்ளது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
செபியின் ஒழுங்குமுறை கட்டமைப்புக்குள் நுழைய நீதிமன்றத்திற்கு அதிகாரம் குறைவு
அந்த தீர்ப்பில், செபியின் ஒழுங்குமுறை கட்டமைப்புக்குள் நுழைய, நீதிமன்றத்திற்கு போதிய அதிகாரம் இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். "செபியின் ஒழுங்குமுறை கட்டமைப்பிற்குள் நுழைவதற்கான இந்த நீதிமன்றத்தின் அதிகாரம் வரம்புக்குட்பட்டது. வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீடு(FPI) மற்றும் பட்டியல் கடமைகள் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்(LODR) விதிமுறைகள் மீதான அதன் திருத்தங்களைத் திரும்பப் பெறுவதற்கு செபிக்கு வழிகாட்டுவதற்கு சரியான காரணங்கள் எதுவும் இல்லை. விதிமுறைகள் எந்த குறைபாடுகளாலும் பாதிக்கப்படுவதில்லை" என்று அந்த அமர்வு குறிப்பிட்டது. "செபி இது தொடர்பாக 24 புகார்களில் 22ஐ விசாரித்துள்ளது. சொலிசிட்டர் ஜென்ரலின் உத்திரவாதத்தை ஏற்று மீதமுள்ள இரண்டு புகார்களையும் மூன்று மாதங்களில் முடிக்க செபிக்கு உத்தரவிடுகிறோம்" என நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையை சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்
அதானி குழுமத்தின் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, விஷால் திவாரி, எம்.எல்.சர்மா மற்றும் காங்கிரசைச் சேர்ந்த ஜெயா தாக்கூர் மற்றும் அனாமிகா ஜெய்ஸ்வா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். அதில் அதானி குழுமம் அதன் பங்கு விலைகளை போலியாக உயர்த்தியதாகவும், கடந்த ஆண்டு ஜனவரி 24 அன்று ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு, அந்த குழுமத்தின் பங்குகள் கடுமையாக வீழ்ச்சியடைந்ததாகவும் கூறப்பட்டிருந்தது. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள், நவம்பர் 24ம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.