தமிழக வெற்றி கழகம்: நடிகர் விஜய்யின் அரசியல் கட்சி பெயர் அறிவிப்பு
நடிகர் விஜய் தொடங்கவுள்ள கட்சியின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை நடிகர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த கட்சியின் பெயரை முறைப்படி தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்ய, தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் புஸ்ஸி ஆனந்த் டெல்லி சென்றுள்ளார். இந்த கட்சி பதிவு செய்த பின்னர், வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் எனவும் விஜய் அறிவித்துள்ளார். 25.1.2024, தனது தளபதி விஜய் மக்கள் இயக்க உறுப்பினர்கள் உடன் பனையூர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தினார் நடிகர் விஜய். அதில் ஒரு மனதாக, அரசியலில் ஈடுபடுவது என்றும், அதற்கான பணிகளை துவங்க முடிவெடுக்கப்பட்டதாகவும் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகம்
#தமிழகவெற்றிகழகம் #TVKVijay pic.twitter.com/ShwpbxNvuM— TVK Vijay (@tvkvijayoffl) February 2, 2024
தமிழக வெற்றி கழகம்- விஜய் கூறுவது என்ன?
இது குறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"அன்பான தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும், என் பணிவான வணக்கங்கள்.'விஜய் மக்கள் இயக்கம்' பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்துவருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம். அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது" என தெரிவித்தார். அதோடு, அரசியலில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள, தான் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளதாகவும், அதுவே தமிழ்நாட்டு மக்களுக்கு தான் செய்யும் நன்றி கடனாக கருதுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.