சேலம் சங்கரகிரி அருகே லாரி மீது கார் மோதி கோர விபத்து - 6 பேர் உயிரிழப்பு
ஈரோடு பெருந்துறை, குட்டப்பாளையம் பகுதியினை சேர்ந்த கருப்பண்ணன் என்பவரது மகன் பழனிசாமி(52), இவரது மனைவி பாப்பாத்தி(40). இவர்களுக்கு பிரியா என்னும் மகள் இருந்துள்ளார். பிரியாவுக்கும் சேலம் மாநகராட்சி ஓட்டுநரான காளியப்பன் மகன் ராஜதுரைக்கும் கடந்த வருடம் திருமணம் நடந்துள்ளது, இவர்களுக்கு ஒரு வயதில் சஞ்சனா என்னும் பெண் குழந்தை உள்ளது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று(செப்.,5)இரவு சேலத்தில் உள்ள தங்கள் மகள் வீட்டிற்கு பழனிசாமியும், மனைவி பாப்பாத்தியும் தங்கள் உறவினர்களுடன் சென்றுள்ளனர். அங்கிருந்து திரும்புகையில் மகள் பிரியாவையும், பேத்தியையும் உடன் அழைத்து வந்துள்ளனர். அப்போது அதிகாலையில் ஈரோடு நோக்கி சங்ககிரியை அடுத்த சேலம்-கோவை நெடுஞ்சாலையில் 8 நபர்களை கொண்ட கார் சென்று கொண்டிருக்கையில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரிமீது பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
இந்த கோர விபத்தில் பழனிசாமி, பாப்பாத்தி, இவர்கள் பேத்தி சஞ்சனா(1), மற்றும் அவர்கள் உறவினர்களான ஆறுமுகம்(30), அவரது மனைவி மஞ்சுளா(21) மற்றும் செல்வராஜ்(55) உள்ளிட்ட 6 பேர் சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஓட்டுநர் விக்னேஷ்(20) மற்றும் பாப்பாத்தி மகள் பிரியா(25) இதில் படுகாயமடைந்த நிலையில், தகவலறிந்து அங்கு வந்த போலீசார் அவர்களை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் உயிரிழந்த 6 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அதிகாலை நேரத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி முகப்பு விளக்கு போட்டிருந்ததா இல்லையா? என்னும் கோணத்தில் தங்கள் முதற்கட்ட விசாரணையினை துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.