
சென்னை துறைமுகத்தில் கப்பலில் பழுது பார்க்கும்பொழுது கேஸ் பைப்லைன் வெடித்து ஒருவர் பலி
செய்தி முன்னோட்டம்
சென்னை துறைமுகத்தில் உள்ள கோஸ்டல் பர்த் பிளேஸ் என்னும் இடத்தில் ஒடிசா மாநிலத்திலிருந்து எண்ணெய் ஏற்றி செல்லக்கூடிய கப்பல் ஒன்று கடந்த 31ம் தேதி வந்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் இந்த கப்பலை பழுது பார்க்கும் பணியில் ராயல் டெக் என்னும் நிறுவனம் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அதன்படி இன்று(நவ.,10) காலை இந்நிறுவனத்தை சேர்ந்த பணியாளர் ஒருவர் கேஸ் கட்டர் கொண்டு எஞ்சின் பகுதியில் போல்ட் ஒன்றினை அகற்றும் பணியினை செய்து கொண்டிருந்துள்ளார்.
அப்போது எதிர்பாராவிதமாக கேஸ் பைப்பில் தீப்பொறிப்பட்டு வெடித்து விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விபத்து
பலத்த தீக்காயங்களோடு 3 பேர் மருத்துவமனையில் அனுமதி
இந்த விபத்தில் தண்டையார்பேட்டை பகுதியினை சேர்ந்த சகாய தங்கராஜ் என்பவர் சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும், விபத்து ஏற்பட்ட பகுதியின் அருகே இருந்த காசிமேடு பகுதியினை சேர்ந்த ஜோஸ்வா, ஜீவரத்தினம் நகரை சேர்ந்த புஷ்பலிங்கம், தண்டையார்பேட்டையை சேர்ந்த ராஜேஷ் உள்ளிட்ட 3 பேர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே இந்த சென்னை துறைமுக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தங்கள் விசாரணையினை துவங்கியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
இந்த விபத்தால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.