Page Loader
மதுபான ஊழலில் கிடைத்த பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய  ஆம் ஆத்மி: ED
கோவா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த குழுக்களின் தன்னார்வலர்களுக்கு ரூ. 70 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாக ED தெரிவித்துள்ளது.

மதுபான ஊழலில் கிடைத்த பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி: ED

எழுதியவர் Sindhuja SM
Feb 03, 2023
10:54 am

செய்தி முன்னோட்டம்

டெல்லி மதுபான ஊழல் வழக்கில், அமலாக்க இயக்குனரகம்(ED) புதிய குற்றப்பத்திரிகையைத் தயாரித்துள்ளது. அந்த குற்றப்பத்திரிகையில், டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின்(AAP) தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், மதுபான வியாபாரியும், Indospiritஇன் நிர்வாக இயக்குநருமான சமீர் மகேந்திருவுடன் வீடியோ காலில் பேசியதாக கூறப்பட்டுள்ளது. அப்படி பேசும் போது ஆம் ஆத்மி தலைவர் விஜய் நாயரின் தொலைபேசியை அவர்கள் பயன்படுத்தியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கோவா சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்துக்கு இந்த ஊழல் பணம் பயன்படுத்தப்பட்டதாகவும் ED குற்றம்சாட்டியுள்ளது. டெல்லி லெப்டினன்ட்-கவர்னர் வி.கே.சக்சேனாவின் ஆலோசனையின் பேரில், ஆம் ஆத்மி நிர்வாகம் அதன் மது கொள்கை 2021-22ன் கீழ் மதுபான உரிமங்கள் வழங்குவதில் விதிமீறல்கள் செய்ததாக எழுந்த குற்றசாட்டுகள் குறித்து விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.

டெல்லி

நாயர் ஆம் ஆத்மி தலைவர்கள் சார்பில் ரூ.100 கோடி பெற்றார்: ED

பாரதிய ஜனதா கட்சி தனது அரசியல் போட்டியாளர்களை துன்புறுத்துவதற்காக விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்துகிறது என்று இதற்கு கெஜ்ரிவால் பதிலளித்திருந்தார். டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் நெருங்கிய உதவியாளர் என்று கூறப்படும் நாயர் கைது செய்யப்பட்ட ஒரு நாளில் மதுபான வியாபாரி மகேந்திருவையும் ED கைது செய்தது. ஆம் ஆத்மியின் தகவல் தொடர்புப் பொறுப்பாளர் நாயர், மதுபான உரிமம் வழங்குவதற்கான முன்பணமாக ரூ.100 கோடி ரூபாய் ஆம் ஆத்மி சார்பில் பெற்றதாக கூறப்பட்டுள்ளது. இந்த பணத்தை "தெற்கு குழு" வழங்கியதாகவும் ED கூறியுள்ளது. தெலுங்கானாவின் ஆளும் பாரத் ராஷ்டிர சமிதியின்(BRS) கவிதா, ஆந்திராவின் ஆளும் YSR காங்கிரஸின் எம்பியான மகுண்டா ஸ்ரீனிவாசுலுரெட்டி மற்றும் அரபிந்தோ பார்மாவின் சரத்ரெட்டி ஆகியோர் தெற்குக் குழுவில் அடங்குவர்.