Page Loader
ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் - நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார் 
ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் - நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார்

ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் - நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார் 

எழுதியவர் Nivetha P
Aug 05, 2023
02:51 pm

செய்தி முன்னோட்டம்

2020ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின் பொழுது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டில் மத்திய அரசு சார்பில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி, தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் மிக்க அருங்காட்சியகம் அமையவுள்ளது. ஆதிச்சநல்லூர் பகுதியில் அகழாய்வு பணிகள் நடந்து வரும் நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், தங்க நெற்றி பட்டயம், சங்ககால வாழ்விட பகுதிகள், வெண்கலத்தாலான பொருட்கள், இரும்பு பொருட்கள் உள்ளிட்டவைகள் கிடைத்துள்ளது. அகழாய்வு பணியின்பொழுது கிடைத்த பொருட்களை காட்சியகப்படுத்தவே ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது என்னும் பட்சத்தில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று(ஆகஸ்ட்.,5) அடிக்கல் நாட்டினார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

அடிக்கல் 

5 ஏக்கர் பரப்பளவில் அதிநவீன அருங்காட்சியகம் 

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் 5 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள இந்த அருங்காட்சியக அடிக்கல் நாட்டு நிகழ்வில் எம்.பி.கனிமொழி, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் பங்கேற்றனர். இதனிடையே அடிக்கல் நாட்டிய பின்னர் நிர்மலாசீதாராமன் செய்தியாளர்களை சந்தித்துப்பேசியுள்ளார். அவர் பேசுகையில்,"ஆதிச்சநல்லூரில் தொழில்நுட்ப வசதிகள் கொண்டு அதிநவீன அருங்காட்சியகம் அமையவுள்ளது. இங்கு நடத்தப்பட்ட பலதரப்பட்ட அகழாய்வில் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு வணிகம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது" என்று கூறினார். மேலும் இங்கு மனிதர்கள் உடல்களை புதைத்த இடங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும், அதோடு 3500ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்கள் உபயோகித்த தங்கம், திணை, நெல் உள்ளிட்டவைகளை தொல்லியல் துறை கண்டறிந்துள்ளது என்றும் தெரிவித்தார். தொடர்ந்து, இந்த அருங்காட்சியகம் அமைக்க போதுமான நிதியினை மத்திய அரசு எவ்வித தடையுமின்றி வழங்கும் எனவும் கூறியது குறிப்பிடத்தக்கது.