புதிய தொழில்நுட்பம் - சென்னையில் ட்ரோன்களுக்காக ஒரு காவல் நிலையம்!
சென்னைக் காவல்துறையினர் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு விதமான புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், தற்போது சென்னையில் ட்ரோன்களுக்காக ஒரு காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த காவல்நிலையத்திற்கு இதுவரை 3 கோடியே 60 லட்ச ரூபாய் தமிழக அரசு சார்பாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ட்ரோன் காவல் நிலையத்தை அடையாறு சாஸ்திரி நகர் காவல் நிலையத்திற்கு சொந்தமான இடத்தில் அமைத்துள்ளனர். இதற்காக 20 பொறியியல் பட்டதாரிகள் காவலர்களாக நியமிக்கப்பட்டுள்னர். இந்த ட்ரோன் காவல் நிலையத்தில் 9 மேசைகள் அமைக்கபட்டுள்ளன. ஒவ்வொரு மேசையிலும் ஒவ்வொரு விதமான ட்ரோன்கள் கண்காணிக்கப்படும். இதன் மூலம், சென்னையில் மூன்று விதமான மென்பொருட்கள் கொண்ட ட்ரோன்கள் பயன்படுத்தப்படவுள்ளன. இந்த 3 வகையான ட்ரோன்களிலும் மிக தெளிவான கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது.
3 வகையான ட்ரோன்கள்!
சர்வைலன்ஸ் ட்ரோன்: இவை 5கிலோ மீட்டர் சுற்றளவு பறக்கும் சிறிய வகை ட்ரோன்களாகும். முக்கிய தலைவர்கள் வரும்போது சுற்று பகுதிகளைக் கண்காணிப்பதற்கென்று இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை 30 நிமிடங்கள் தொடர்ந்து பறக்கும் திறன் கொண்டவை. ஏரோபிளேன்-ட்ரோன்: இவை 15கிலோ மீட்டர் சுற்றளவு மற்றும் 120மீட்டர் உயரம் பறக்கும் ட்ரோன்களாகும். இவை 45 நிமிடங்கள் தொடர்ந்து பறக்கும் திறன் கொண்டது. நிறைய மக்கள் கூடியிருக்கும் இடத்தில் அதிக நேரம் கண்காணிப்பதற்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. எடைகளை தூக்கும் ட்ரோன்: இந்த ட்ரோன்களால் 15-20கிலோ எடைகளைத் தூக்க முடியும். கடலில் சிக்கி இருப்பவர்களுக்கு உதவி செய்ய, 180-200கிலோ எடைகளைத் தாங்கும் inflatable-lifebuoy இதில் பொருத்தப்பட்டுள்ளது. இது வெள்ளம் வரும் காலங்களில் பெரும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.