மகனுக்கு நிவாரண தொகை கிடைக்கும் என எண்ணி தற்கொலை செய்துகொண்ட தாய்
சேலம் கலெக்டர் அலுவலத்தில் துப்புரவு பணியாளராக பணி புரிந்து வந்த பாப்பாப்பதி(46) என்பவர் கடந்த மாதம் 28ஆம் தேதி 2வது அக்ரஹாரம் பகுதியில், தனியார் பஸ் மோதி உயிரிழந்தார். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தியதில் ஒரு உருக்கமான தகவல் வெளியாகி இருக்கிறது. பாப்பாப்பதி, சேலம் கலெக்டர் அலுவலத்திற்கு பின்புறத்தில் உள்ள மறைமலை அடிகள் தெருவில், தனது மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்தார். அவரது கணவரை உயிரிழந்துவிட்டதால், குடும்ப பொறுப்பு மொத்தத்தையும் அவரே கவனித்து வந்தார். தனது மகளை கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்த அவர், மகனையும் சமீபத்தில் கல்லூரியில் சேர்த்தார்.
தனது மகனின் படிப்புக்காக தற்கொலை செய்துகொண்ட தாய்
எனினும், பொருளாதார பிரச்னையால், தனது மகனின் கல்லூரி கட்டணமான ரூ.45 ஆயிரத்தை அவரால் கட்ட முடியவில்லை. இதனையடுத்து, அவர் அக்கபக்கத்தில் உள்ள பலரிடம் கடன் கேட்டு முறையிட்டிருக்கிறார். ஆனால், யாரும் அவருக்கு பணம் தந்து உதவவில்லை. இந்த சூழ்நிலையில் தான், துப்புரவு பணியாளர்கள் உயிரிழந்தால் அவர்களது குடுமபத்திற்கு அரசு நிவாரண தொகை கிடைக்கும் என்பது அவருக்கு தெரிய வந்திருக்கிறது. அதன் பிறகு, அந்த நிவாரண தொகை தனது மகனுக்கு கிடைத்தால் அவனது படிப்பு பாதிக்கப்படாது என்ற நம்பிக்கையில் பாப்பாப்பதி ஒரு தனியார் பேருந்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். சிசிடிவி காட்சிகளில், அவர் வேண்டுமென்றே பேருந்தை நோக்கி ஓடுவது நன்றாக தெரிகிறது என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.