பொள்ளாச்சியில் 60 முறை சிறைக்கு சென்றவர் 61வது முறையாக சிறைக்கு செல்லும் சம்பவம் அரங்கேறியுள்ளது
கோவை பொள்ளாச்சியில் மகாலிங்கபுரம் ரவுண்டானா பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிமணி தலைமையில் போலீசார் இன்று(மார்ச்.,1) அதிகாலை 4.30மணிக்கு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார்கள். அப்போது அந்த பக்கமாக மோட்டார் சைக்கிளில் ஒருவர் வந்துள்ளார். அவரை மறிக்கமுயன்ற நிலையில் அவர் நிற்காமல் சென்றுள்ளார். அவரை போலீசார் விரட்டிப்பிடித்து விசாரணை நடத்தியுள்ளார்கள். அதில் அவர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த லட்சுமணன் என்பதும், அவர் மீது 60க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. திருடிவிட்டு சிறைக்கு செல்வதே இவரது வழக்கமாக இருந்துவந்துள்ளது. பொள்ளாச்சி நெகமம் பகுதியில் நடந்த திருட்டின் வாய்தாவிற்கு ஆஜராவதற்கு இவர் பொள்ளாச்சிக்கு வந்துள்ளார். ஆஜரான பின்னர் ஊருக்கு செல்லாமல் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடியுள்ளார் என்று கூறப்படுகிறது.
திருட்டு மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்த லட்சுமணன்
பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் அந்த மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்த அவர் புளியம்பட்டி அருகே ஒரு கடையை உடைத்து ரூ.1,870 கொள்ளையடித்துள்ளார். மேலும் அங்கிருந்த பூட்டையும், பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களையும் எடுத்துக்கொண்டு மகாலிங்கபுரத்தில் சுற்றி திரியும் பொழுது தான் மகாலிங்கபுரத்தில் போலீசாரிடம் பிடிபட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் அவரிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிள், செல்போன், பூட்டுகள், திருட பயன்படுத்தப்படும் பொருட்கள், பணம் முதலியவற்றை பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதனை தொடர்ந்து, அவரை கைது செய்து சிறையில் அடைக்கப்படுவதுக்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.