Page Loader
₹1,120க்கு மனைவிக்கு தங்கத்தினாலான தாலி வாங்க நகைக் கடைக்கு சென்ற 93 வயது முதியவர்; நெகிழ வைத்த சம்பவம்
ரூ.1,120க்கு தங்கத்தினாலான தாலி வாங்க நகைக் கடைக்கு சென்ற 93 வயது முதியவர்

₹1,120க்கு மனைவிக்கு தங்கத்தினாலான தாலி வாங்க நகைக் கடைக்கு சென்ற 93 வயது முதியவர்; நெகிழ வைத்த சம்பவம்

எழுதியவர் Sekar Chinnappan
Jun 19, 2025
11:09 am

செய்தி முன்னோட்டம்

மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகரில் நடந்த ஒரு மனதைத் தொடும் சம்பவத்தில், 93 வயது முதியவரின் எளிய அன்புச் செயல், மில்லியன் கணக்கான நெட்டிசன்களின் இதயங்களைக் கவர்ந்துள்ளது. நிவ்ருத்தி ஷிண்டே, அவரது மனைவி சாந்தாபாயுடன், ஆஷாதி ஏகாதசி பண்டிகைக்காக பந்தர்பூருக்கு யாத்திரை மேற்கொண்டபோது, ​​ஒரு நகைக் கடைக்குள் நுழைந்து, தனது மனைவிக்கு ஒரு தங்கத்தினால் ஆன தாலி வாங்கச் சொன்னார். ஜல்னா மாவட்டத்தில் உள்ள அம்போரா ஜஹாகிர் கிராமத்தைச் சேர்ந்த பாரம்பரிய வெள்ளை வேட்டி-குர்தா மற்றும் தொப்பி அணிந்திருந்த தம்பதியினரின் செயல், ஆரம்பத்தில் உதவி கோரி வந்துள்ளதாக அங்குள்ளவர்கள் எண்ணியுள்ளனர். இருப்பினும், திருமணத்தை குறிக்கும் தங்கத் தாலியை வாங்குவதற்கான தனது உண்மையான நோக்கத்தை நிவ்ருத்தி ஷிண்டே விளக்கியபோது கடை ஊழியர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.

பரிசளிப்பு

₹20 மட்டுமே பெற்றுக்கொண்டு நகையை கொடுத்த கடைக்காரர்

முதியவரின் வெகுளித்தனம் மற்றும் அவரது மனைவி மீதான நீடித்த அன்பால் மிகவும் ஈர்க்கப்பட்ட கடை உரிமையாளர், அவர்களுக்கு தங்கத்தினால் ஆன தாலியை பரிசளிக்க முடிவு செய்தார். எனினும், அதை விலையில்லாமல் கொடுப்பதற்கு பதிலாக, ₹20 மட்டும் ஒரு அடையாளத் தொகையாக ஏற்றுக்கொண்டார். "அவர் எனக்கு ₹1,120 கொடுத்தார், ஆனால் என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்களின் அன்பு எனக்கு உண்மையான மதிப்புகளை நினைவூட்டியது." என்று கடைக்காரர் கூறினார். அந்த தருணத்தின் உணர்ச்சிபூர்வமான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, நெட்டிசன்கள் இந்த ஜோடியின் பாசத்தையும் கடை உரிமையாளரின் கருணையையும் பாராட்டி வருகின்றனர். விவாகரத்துகள் பெருகி வரும் இந்த காலத்தில், நீடித்த அன்பின் அடையாளமாக அவர்கள் இருவரும் தற்போது மாறியுள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

வைரலாகும் காணொளி