சபரிமலை: நிமிடத்திற்கு 80-85 பேர் சாமி தரிசனம்
செய்தி முன்னோட்டம்
கேரளா மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோயில் நடையானது மகரவிளக்கு மற்றும் மண்டல பூஜைகளுக்காக கடந்த நவம்பர் 16ம் தேதி திறக்கப்பட்டது.
இப்பூஜைகளை தொடர்ந்து பக்தர்கள் தற்போது மாலை அணிவித்து விரதமிருந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
ஆன்லைன் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், ஒருநாளைக்கு 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
நாளுக்கு நாள் பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.
இதனால் பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ள வெகுநேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிகிறது.
பக்தர்கள்
தேவசம்போர்டு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது
இதன் காரணமாக, தேவசம்போர்டு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.
கனனபாதையில் அமைந்துள்ள ஒவ்வொரு நிலையத்திலும் பக்தர்கள் கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டு, நெரிசல் குறைந்த பின்னரே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.
அதேபோல் நிமிடத்திற்கு 80ல் இருந்து 85 பேர் வரை 18ம் படி வழியே தரிசனத்திற்கு அழைத்து செல்லப்படுகிறார்கள்.
குடிநீர், பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதி செய்ய எக்ஸ்கியூட்டிவ் மாஜிஸ்திரேட் மற்றும் ட்யூட்டி மாஜிஸ்திரேட் தலைமையில் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கென தனி வரிசை ஒதுக்கப்பட்டுள்ளது.
கூட்டம் அதிகரிப்பு காரணமாக சபரிமலை முழுவதும் 1950 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நடை திறக்கப்பட்டதில் இருந்து இதுவரை மொத்தம் 15,82,536 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.