77வது சுதந்திர தினம்: செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி
1,800 சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று(ஆகஸ்ட் 15) மூவர்ண கொடியை ஏற்றினார். ஆகஸ்ட் 15, 1947 அன்று, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இந்தியா வெள்ளையர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றது. இந்தியாவின் சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்த போராளிகளை நினைவு கூறுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, பிரதமர்-கிசான் திட்டத்தின் பயனாளிகள் உட்பட சுமார் 1,800 சிறப்பு விருந்தினர்களை அரசாங்கம் சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள அழைத்துள்ளது. டெல்லி செங்கோட்டையில் வைத்து ஆயுதப்படை மற்றும் டெல்லி காவல்துறையினர் பிரதமர் மோடிக்கு மரியாதை செய்தனர்.
21 துப்பாக்கி வணக்கம் செலுத்தப்பட்டது
அதன் பிறகு, தேசிய பாடல் இசைக்கப்பட்டு, மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது. பின்னர், 21 துப்பாக்கி வணக்கம் செலுத்தப்பட்டது. பிரதமர் தேசியக் கொடியை ஏற்றியவுடன், இந்திய விமானப்படையின் மார்க்-III துருவ் என்ற இரண்டு மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள் மலர்களை தூவின. இன்று மாலை குடியரசு தலைவர் மாளிகையில் வைத்து 'அட் ஹோம் ரிசப்ஷன்' என்ற விருந்து நிகழ்ச்சி நடக்கும். வழக்கமான பங்கேற்பாளர்ளை தவிர, முன்னணி சுகாதாரப் பணியாளர்கள், பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் புதுமையாளர்கள் உட்பட பலதரப்பட்ட விருந்தினர்கள் இதில் கலந்து கொள்வார்கள். மேலும், அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட செல்ஃபி எடுக்கும் ஸ்டேஷன்கள் டெல்லி முழுவதும் 12 இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.