தர்மபுரியில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் 7,033 மாணவர்கள் பயன்
தர்மபுரியில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தமிழ்ப் புதல்வன் திட்ட பயனாளிகளுக்கு பற்று அட்டைகளை வழங்கினார். பாப்பிரெட்டிபட்டியில் உள்ள அரசு கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், அங்கு தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களுக்கு அதற்கான பற்று அட்டைகளை வழங்கினார். தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் 68 கல்லூரிகளில் 7,033 மாணவர்கள் மாதம் ரூ . 1,000 நிதியை பெறுகின்றனர். தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி இதுகுறித்து கூறுகையில், கல்லூரி மாணவர்கள் இந்த நிதியை தங்கள் கல்வி வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும், போட்டித் தேர்வுக்கு தேவையான நல்ல புத்தகங்கள் வாங்கவும் பயன்படுத்த வேண்டும் என்றார்.
தமிழ்ப் புதல்வன் திட்டம்
தமிழகத்தில் 2021இல் திமுக அரசு அமைந்த பிறகு பெண்களுக்கான உயர்கல்வியை உறுதி செய்வதற்கான புதுமைப் பெண் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ . 1,000 நிதி வழங்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக இந்த திட்டத்தை மாணவர்களுக்கும் நீட்டித்து இந்த ஆண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். கடந்த 9ஆம் தேதி கோவை அரசு கலைக் கல்லூரியில் முதல்வர் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழ்ப் புதல்வன் என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் கீழ் ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்துவிட்டு கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு ரூ.1,000 நிதி வழங்கப்படுகிறது. இந்த நிதி மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.