தேஜஸ்வி யாதவ் வீட்டில் சோதனை: ₹70 லட்சம் ரொக்கம், 1.5 கிலோ தங்க நகைகள் சிக்கியது
லாலு பிரசாத் யாதவின் மகள்கள் மற்றும் மகன் தேஜஸ்வி யாதவ் வீடுகளில் இருந்து 70 லட்சம் ரூபாய் ரொக்கம், 1.5 கிலோ தங்க நகைகள், 540 கிராம் தங்க கட்டிகள் மற்றும் 900 அமெரிக்க டாலர்கள் உட்பட வெளிநாட்டு கரன்சிகளை அமலாக்க இயக்குனரகம்(ED) நேற்று(மார் 10) கைப்பற்றியது. டெல்லியில் உள்ள பீகார் துணை முதல்வரின் வீடு உட்பட தேசிய தலைநகர் மண்டலம்(என்சிஆர்), பாட்னா, ராஞ்சி மற்றும் மும்பை ஆகிய 24 இடங்களில் ED சோதனை நடத்தியது. லாலுவின் மூன்று மகள்கள் ராகினி, சந்தா, ஹேமா யாதவ் மற்றும் லாலுவுக்கு நெருக்கமானதாகக் கருதப்படும் முன்னாள் ஆர்ஜேடி எம்எல்ஏ அபு டோஜானா ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
குற்றச்சாட்டப்பட்ட நிறுவனத்திற்கு கீழ் பதிவு செய்யப்பட்டிருந்த தேஜஸ்வியின் வீடு
காஜியாபாத்தில் உள்ள சமாஜ்வாதி கட்சி (எஸ்பி) தலைவர் ஜிதேந்திர யாதவ் வீட்டிலும் ED சோதனை நடத்தியது. ஜிதேந்திர யாதவ் ராகினியின் கணவராவார். டெல்லியில் உள்ள நியூ ஃப்ரெண்ட்ஸ் காலனியில் சோதனை நடத்தப்பட்டதாகவும், தேஜஸ்வி இருந்த வீடு, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏகே இன்ஃபோசிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வேயில் வேலை கிடைத்ததற்கு லஞ்சம் கொடுத்தவர்கள், ஒரு நிலத்தை ஏகே இன்ஃபோசிஸ்டம்ஸ் நிறுவனத்திற்கு கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது . எனவே வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட நிறுவனத்தோடு தேஜஸ்விக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இதே வழக்கு தொடர்பாக மத்திய அமைச்சர் லாலு மற்றும் அவரது மனைவியிடம் சமீபத்தில் தான் சிபிஐ விசாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.