சத்தீஸ்கரில் என்கவுன்டரில் 7 மாவோயிஸ்டுகள் பலி: ஏராளமான ஆயுதங்கள் மீட்பு
சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் இன்று நடைபெற்ற என்கவுன்டரில் இரண்டு பெண் உறுப்பினர்கள் உட்பட குறைந்தது ஏழு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். என்கவுண்டர் நடந்த இடத்தில் இருந்து ஏகே 47 உட்பட ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. மாவட்ட ரிசர்வ் காவலர் (டிஆர்ஜி) மற்றும் சிறப்பு அதிரடிப் படை (எஸ்டிஎஃப்) ஆகியவற்றின் கூட்டு பாதுகாப்புக் குழுவிற்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே இன்று காலை 6 மணியளவில் ஒரு காட்டில்சண்டை நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். நாராயண்பூர் மற்றும் கான்கேர் எல்லைப் பகுதியின் அபுஜ்மரில் மாவோயிஸ்ட் என்கவுன்டருக்காக பாதுகாப்புப் படையினர் திங்கள்கிழமை புறப்பட்டனர்.
ஒரு ஏகே 47 உட்பட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்
"டெக்மேட்டா மற்றும் காகூர் கிராமத்திற்கு இடையே உள்ள காட்டில் காவல்துறையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே ஒரு என்கவுன்டர் நடந்தது. சம்பவ இடத்தைத் தேடும் போது, இரண்டு பெண் மாவோயிஸ்டுகள் உட்பட மொத்தம் ஏழு மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டு அவர்களின் அடையாளங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன." என்று ஒரு அதிகாரி கூறியுள்ளார். மாவோயிஸ்ட் முகாமில் இருந்து ஒரு ஏகே 47 உட்பட ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் அன்றாட பயன்பாட்டு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று அந்த அதிகாரி கூறினார். இந்த மாத தொடக்கத்தில், சத்தீஸ்கரின் கான்கேர் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில், மூத்த கிளர்ச்சித் தலைவர் சங்கர் ராவ் உட்பட 29 மாவோயிஸ்டுகளை பாதுகாப்புப் படையினர் கொன்றனர்.