வீடியோ: சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டரில் 7 மாவோயிஸ்டுகள் பலி
சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் நேற்று நடந்த என்கவுன்டரில் ஏழு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர் மற்றும் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறையைச் சேர்ந்த மூன்று ஜவான்கள் காயமடைந்தனர். ஆர்ச்சா பகுதியில் இருக்கும் கோபல் மற்றும் துல்துலி கிராமங்களுக்கு அருகிலுள்ள காட்டில் நேற்று மாலை 3 மணியளவில் இந்த துப்பாக்கிச் சண்டை நடந்தது. அந்த பகுதியில் பாதுகாப்புப் பணியாளர்களின் கூட்டுக் குழு மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நாராயண்பூர், கொண்டகான், தண்டேவாடா மற்றும் பஸ்தார் மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறையின் மாவட்ட ரிசர்வ் காவலர்களும், இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறையின் (ஐடிபிபி) 45வது பட்டாலியனும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
மாவோயிஸ்டுகள் யார் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை
சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்டரில் 7 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். உயிரிழந்த மாவோயிஸ்டுகள் யார் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. சம்பவ இடத்தில் இருந்து சீருடையில் இருந்த 7 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மற்றும் சில ஆயுதங்கள் மீட்கப்பட்டது. அந்த துப்பாக்கிச் சண்டையில் மூன்று ஜவான்களும் காயமடைந்தனர், மேலும் அப்பகுதியில் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இதுவரை சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தனித்தனி என்கவுன்டரில் 125 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். மே 23 அன்று, நாராயண்பூர்-பிஜாப்பூர் மாவட்டங்களுக்கு இடையேயான எல்லையில் உள்ள காட்டில் பாதுகாப்புப் பணியாளர்களுடன் நடந்த என்கவுன்டரில் ஏழு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். மே 10 அன்று பிஜப்பூர் மாவட்டத்தில் 12 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.