சட்டவிரோதமாக கட்டப்பட்ட 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததால் குஜராத்தில் 7 பேர் பலி
குஜராத்தின் சூரத்தில் நேற்று ஐந்து மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்நிலையில், அந்த இடத்தில் இருந்து குறைந்தது ஏழு உடல்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன. நேற்று மதியம் நடந்த இந்தச் சம்பவத்தை அடுத்து, இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டவர்களை மீட்பதற்கான பணி இன்னும் நடந்து வருகிறது. "இரவு முழுவதும் தேடுதல் பணி தொடர்ந்தது. ஏழு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன" என்று சூரத்தின் தலைமை தீயணைப்பு அதிகாரி பசந்த் பரீக் உறுதிப்படுத்தினார். மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) ஆகியவற்றின் குழுக்களால் அந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மேலும் ஆறு முதல் ஏழு பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கிட்டத்தட்ட ஐந்து பேர் இன்னும் உள்ளே சிக்கியிருக்கலாம்
மீட்புப் பணிகளை மேற்பார்வையிட சம்பவ இடத்திற்கு சூரத் காவல்துறை ஆணையர் அனுபம் சிங் கெலாட் வந்துள்ளார். மேலும், மீட்புப் பணிகளின் தொடக்கத்தில் சிக்கியவர்களின் குரல்கள் கேட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இடிந்து விழுந்த கட்டிடம் 2017ல் கட்டப்பட்டதாகும். இந்த கட்டிடம் சட்டவிரோதமாக கட்டப்பட்டது என்ற தகவலும் வெளியாகி உள்ளது. முதற்கட்ட தகவலின்படி, அந்த கட்டிடத்தில் உள்ள ஐந்து அடுக்குமாடி குடியிருப்புகளில், பெரும்பாலும் தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள் வாழ்ந்து வந்தனர். "மீட்புப் பணி தொடங்கியபோது, உள்ளே சிக்கியவர்களின் குரல்கள் கேட்டன. இடிபாடுகளில் இருந்து ஒரு பெண்ணை உயிருடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தோம். கிட்டத்தட்ட ஐந்து பேர் இன்னும் உள்ளே சிக்கியிருக்கலாம் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்," என்று கெலாட் கூறியுள்ளார்.