தமிழகத்தில் 7.5% இட ஒதுக்கீடு - மத்திய இணையமைச்சர் பாராட்டு
சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி முன்னாள் மாணவர்களின் 10ம் ஆண்டு அறக்கட்டளை ஆண்டுவிழா அண்மையில் நடந்தது. இதில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர், கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 145ல் இருந்து 260 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 22 எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், 19 எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவ இளநிலை பட்ட படிப்புகள் துவங்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். தொடர்ந்து 2014ம் ஆண்டில் இளநிலை மருத்துவ படிப்புகளின் எண்ணிக்கை 51,348ஆக இருந்த நிலையில் தற்போது 91,927ஆக உயர்ந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
அனைத்து கட்டணங்களிலும் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது பாராட்டிற்குரியது
மேலும் அவர், தமிழ்நாடு மாநிலத்தில் மருத்துவ கல்வியின் இளநிலை பட்டப்படிப்பில் சேர அரசு பள்ளியில் படித்த மாணவர்கள், பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய மாணவர்கள் உள்ளிட்டோருக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் கல்லூரியில் படிப்பினை முடிக்கும் காலம்வரை அனைத்து கட்டணங்களிலும் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது மிகவும் பாராட்டிற்குரியது என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கையினை மேலும் அதிகரிக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது என்றும் கூறியுள்ளார். அடுத்த தலைமுறை மாணவர்கள் இனி வரும் காலங்களில் தங்கள் தாய் மொழியிலேயே அறிவியல் மற்றும் மருத்துவ படிப்புகளை படிக்க முடியும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.