நீதித்துறைக்கு அரசியல் அழுத்த அச்சுறுத்தல்: தலைமை நீதிபதிக்கு 600 வழக்கறிஞர்கள் கடிதம்
சுமார் 600 வழக்கறிஞர்கள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில், நீதித்துறை முடிவுகளை, குறிப்பாக அரசியல் தலைவர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில், ஒரு அரசியல் அழுத்தம் தங்களை அச்சுறுத்துகிறது என தெரிவித்துள்ளனர். மூத்த வழக்கறிஞர்கள் ஹரிஷ் சால்வே மற்றும் பிங்கி ஆனந்த் உட்பட இந்தியாவில் உள்ள 600க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு எழுதிய கடிதத்தில், நீதித்துறையில் செல்வாக்கு செலுத்த, ஆதிக்கம் செலுத்த நடைபெறும் முயற்சிகள் குறித்து தங்கள் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக அரசியல் தலைவர்கள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில், நீதித்துறை முடிவுகளை பாதிக்கும் வகையில் அழுத்தம் தரும் தந்திரங்களை அந்த குழு பயன்படுத்துவதாக வழக்கறிஞர்கள் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
வழக்கறிஞர்கள் கடிதம்
'நீதித்துறைக்கு அச்சுறுத்தல்' என்ற தலைப்பின் கீழ், "இந்த நடவடிக்கைகள் ஜனநாயகக் கட்டமைப்பிற்கும் நீதித்துறை செயல்முறைகளில் வைக்கப்பட்டுள்ள நம்பிக்கைக்கும் கணிசமான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன" என்று வழக்கறிஞர்கள் கடிதத்தில் மேலும் தெரிவித்தனர். தற்போதைய நடைமுறைகளை இழிவுபடுத்தும் முயற்சியிலும், நீதிமன்றங்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சியிலும் "இக்குழு" நீதித்துறையின் "பொற்காலம்" என்று அழைக்கப்படும் தவறான கதைகளைப் பிரச்சாரம் செய்வதாக வழக்கறிஞர்கள் கூறினர். "சில வழக்கறிஞர்கள், பகலில் அரசியல்வாதிகளுக்காக வாதாடுவதும், பின்னர் இரவில் ஊடகங்கள் மூலம் நீதிபதிகள் மீது செல்வாக்கு செலுத்த முயற்சிப்பதை பார்க்கும்போது, கவலை அளிக்கிறது" என்று தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.