கரூரில் மர்ம விலங்கு தாக்கி 6 ஆடுகள் பலி - பீதியில் கிராம மக்கள்
கரூர் மாவட்டம் அருகேவுள்ள அத்திப்பாளையம் புதூர் பகுதியில் நாச்சிமுத்து என்னும் விவசாயிக்கு சொந்தமான தோட்டத்தில் சிறுத்தைப்புலி நடமாட்டம் உள்ளதாக கடந்த 19ம் தேதி கண்டறியப்பட்டது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் வனத்துறையின் உதவியோடு கூண்டுகள் வைத்து சிசிடிவி கேமராக்களை பொருத்தி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். எனினும், இந்நிலையில் தென்னிலை அருகே உள்ள விவசாயி சிதம்பரம் என்பவரது தோட்டத்தில் 6 செம்மறி ஆடுகள் மர்ம விலங்கு கடித்ததால் பலியாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் பீதியில் உள்ளார்கள். அதற்கேற்றாற்போல் கடந்த 2 நாட்களுக்கு முன்னர், நொய்யல் பகுதியிலிருந்து சிறுத்தை 20கி.மீ., கடந்து தென்னிலை பகுதியில் நடமாடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இறந்த கால்நடைகளின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள்
இதனை தொடர்ந்து, கரூர் மாவட்ட தலைமை வன அலுவலர் சரவணன் தலைமையில் வனத்துறை கால்நடை மருத்துவர் பிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்துள்ளனர். பின்னர் இறந்த கால்நடைகளின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், வெறி நாய் கடித்து ஆடுகள் இறந்திருக்கலாம் என கூறியுள்ளனர். எனினும் அப்பகுதிகளில் சிறுத்தைப்புலி நடமாட்டத்தால் ஆடுகள் இறந்த செய்திகள் பரவியதால் மக்கள் அச்சத்தில் உள்ளார்கள். நாமக்கல் மாவட்டம் பரமத்தி பகுதியில் சிறுத்தை புலியை பிடிக்கும் நடவடிக்கையில் தோல்வியடைந்த வனத்துறையினர், தற்போது கரூர் மாவட்டத்தில் உள்ள சிறுத்தை புலியினை பிடிக்கும் நடவடிக்கையிலும் பின்னடைவினை சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.