ஜப்பானின் 6 நிறுவனங்களோடு தமிழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜப்பான் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அங்கு சென்றுள்ளார். இன்று(மே.,29) ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், ஜப்பானின் வெளிநாட்டு வர்த்தகஅமைப்புகளுடன் இணைந்து மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. இதில் கலந்துகொண்ட மு.க.ஸ்டாலின், இந்தியாவை பொறுத்தவரை தமிழ்நாடு மட்டும்தான் ஜப்பானின் முதலீடுகளுக்கு தகுந்த முன்னணி மாநிலமாகவுள்ளது. இதனால் மேம்பட்ட உற்பத்திக்கான ஒரு மையத்தினை தமிழகத்தில் அமைப்பதோடு, இந்தியா-ஜப்பான் கூட்டுஉச்சி மாநாடானது தமிழ்நாட்டில் நடக்கவேண்டும் என்று கூறியுள்ளார். தொடர்ந்து, சென்னையில் நடக்கவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கும் ஜப்பான் நிறுவனங்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில்,ரூ.818.90கோடி முதலீட்டிற்கான ஜப்பான் நாட்டின் 6 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு தொழில்வழிகாட்டி நிறுவனம்-கியோகுட்டோ சாட்ராக் இடையே ரூ.113.90கோடி முதலீட்டிற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
ரூ.200 கோடி முதலீட்டில் உயர்தர எஃகு பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை
அதன்படி, மாம்பாக்கம் சிப்காட் பூங்காவில் லாரிகளுக்கு உபயோகப்படுத்தப்படும் உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் ஆலை நிறுவப்படும். மிட்சுபா நிறுவனத்தின் ரூ.155கோடி முதலீட்டில் கும்மிடிபூண்டியில் இரண்டு மற்றும் நான்கு சக்கரவாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையின் விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்படும். ஷிமிசு நிறுவனத்துடன் கொண்ட ஒப்பந்தத்தில் கட்டுமான பொறியியல் மற்றும் அதுதொடர்பான வணிகம் மேற்கொள்ளப்படும். காஸ்மஸ் நிறுவனத்தின் 200கோடி முதலீட்டில் கட்டுமான துறையில் பயன்படுத்தப்படும் எக்ஸ்ட்ருஷன் லைன்கள், கூரை அமைப்புகள் தயாரித்தல் உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்யும் ஆலை நிறுவப்படும். சடோ-ஜோஷி மெட்டல் வெர்க்ஸ் நிறுவனம் ரூ.200 கோடி முதலீட்டில் உயர்தர எஃகு பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவப்படும். டப்ல் நிறுவனத்துடனான ரூ.150 கோடி முதலீட்டில் துருப்பிடிக்காத உயர்தர எஃகு நெகிழ்வான குழல்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நிறுவ ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.