6 மாதத்திற்கு தேவையான பெட்டி படுக்கையுடன் போராட்டத்தில் குதித்த விவசாயிகள்: உளவுத்துறை கூறுவது என்ன?
டெல்லியின் முக்கிய சாலைகளை விடுத்து தொலைதூர மற்றும் மோட்டார் அல்லாத எல்லைகளை பயன்படுத்தி விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவர் என்று விவசாயிகளின் போராட்டம் 2.0 பற்றிய உளவுத்துறை அறிக்கை கூறுகிறது. ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியை நோக்கி ஒரு பெரும் பேரணியை இன்று தொடங்கியுள்ளனர். குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான உத்தரவாதத்தை கோரி மத்திய அரசை வலியுறுத்தும் நோக்கில், 'டெல்லி சலோ' என்ற பேரணியை இன்று விவசாயிகள் தொடங்கினர். விவசாயிகளின் போராட்டத்திற்காக பஞ்சாபிலிருந்து மட்டும் 1,500 டிராக்டர்கள் மற்றும் 500 வாகனங்கள் அணிதிரட்டப்பட்டுள்ளதாகவும், அந்த வாகனங்களில் ஆறு மாதத்திற்கான உணவு, ரேஷன் பொருட்கள் மற்றும் தளவாடங்கள் உள்ளதாகவும் உளவுத்துறை கூறியுள்ளது.
பிற மாநில விவசாயிகளிடம் ஆதரவு கோரிய விவசாயிகள் கமிட்டி
நேற்று இரவு விவசாயிகள், தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் இடையேயான முக்கிய கூட்டம் எந்த முடிவும் இன்றி முடிவடைந்ததால் விவசாயிகள் இன்று டெல்லி சலோ போராட்டத்தை தொடங்கியுள்ளனர். விவசாயிகள் போராட்டத்திற்கு அழைப்பு விடுப்பதற்கு முன்னதாக, கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டியின்(கேஎம்எஸ்சி) மூத்த தலைவர் அடங்கிய ஒரு முக்கியக் குழு, கேரளா, உத்தரப் பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, உத்தரகாண்ட் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்குச் சென்று அந்தந்த மாநில விவசாயிகளிடம் ஆதரவு கோரியது. இந்நிலையில், இது குறித்து ஒரு அறிக்கையை உளவுத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, பல மாத போராட்டத்திற்கு தேவையான பொருட்களுடன் விவசாயிகள் போராட்டத்தில் குறித்துள்ளனர். மேலும், அவர்களது டிராக்டர்கள் தங்கும் இடங்களாக மாற்றியமைக்கப்பட உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.