ஓய்வுபெற்ற வருமான வரி அதிகாரியிடம் ரூ.51 லட்சம் சுருட்டிய டிஜிட்டல் அரெஸ்ட் கும்பல்! பகீர் பின்னணி
செய்தி முன்னோட்டம்
மும்பையை சேர்ந்த 75 வயதான ஓய்வுபெற்ற வருமான வரித்துறை அதிகாரி தனாஜி பால்வந்த் சாவந்த் என்பவரிடம், லக்னோ காவல்துறையை சேர்ந்த மூத்த அதிகாரிகள் போல் நடித்து போலி டிஜிட்டல் அரெஸ்ட் மூலம் ரூ.51 லட்சத்தை சுருட்டிய அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பணமோசடி வழக்கில் கைதாகி 10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் எனக் மிரட்டி, அவரது ஆயுள் சேமிப்பு முழுவதையும் போலி கணக்கிற்கு மாற்ற வைத்து இந்த மோசடியை அரங்கேற்றியுள்ளனர்.
காவல்துறை
லக்னோ காவல்துறை அதிகாரிகளாக நடித்து அரங்கேறிய வீடியோ கால் நாடகம்
பாதிக்கப்பட்ட ஓய்வுபெற்ற அதிகாரிக்கு வாட்ஸ்அப் அல்லது வீடியோ கால் மூலம் அழைத்த மர்ம நபர், தான் லக்னோ காவல்துறையின் மூத்த அதிகாரி பிரேம்குமார் கௌதம் என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.
அதிகாரியின் அடையாள ஆவணங்களை பயன்படுத்தி தனியார் வங்கியில் கணக்கு தொடங்கப்பட்டு, அதில் பல லட்ச ரூபாய் பணமோசடி நடந்துள்ளதாக அச்சுறுத்தியுள்ளனர்.
தொடர்ந்து காவல் ஆய்வாளர் மற்றும் டிஜிபி போல மேலும் சிலர் பேசி அவரை தொடர் கண்காணிப்பிலேயே வைத்திருந்துள்ளனர்.
மிரட்டல்
போலி ஆவணங்கள் மற்றும் 'டிஜிட்டல் அரெஸ்ட்' மிரட்டல்
அவரை உடனடியாகக் கைது செய்யாமல் இருக்க வேண்டுமென்றால், விசாரணை முடியும் வரை அவரது அனைத்து வங்கி சேமிப்புகளையும் அரசுப் பாதுகாப்புக் கணக்கிற்கு மாற்ற வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
அரசு லோகோ பொறித்த போலி ஆவணங்களை அனுப்பி அவரை நம்ப வைத்த மோசடிக் கும்பல், அவரை வீட்டை விட்டு வெளியேற விடாமலும் யாருடனும் பேச விடாமலும் வீடியோ கால் மூலமே டிஜிட்டல் அரெஸ்ட் செய்து கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
பயந்துபோன அதிகாரி ரூ.51 லட்சத்தை தவணை முறையில் அனுப்பியுள்ளார்.
சைபர் கிரைம்
சைபர் கிரைம் போலீசாரின் அதிரடி விசாரணை மற்றும் கேரளாவில் கைது
பணத்தை அனுப்பிய பிறகு எந்தத் தொடர்பும் இல்லாததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அதிகாரி, மும்பை வட மண்டல சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் தீவிர விசாரணை நடத்திய போலீசார், தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில் கேரளாவைச் சேர்ந்த முகமது சஃப்வான் அப்துல் ஹமீது என்பவரைக் கைது செய்தனர்.
இவர் 'மியூல்' வங்கிக் கணக்குகளை வழங்கி, கமிஷன் தொகையைப் பெற்றுக் கொண்டு மோசடி கும்பலுக்கு உதவியது கண்டுபிடிக்கப்பட்டது.
அச்சுறுத்தல்
இந்தியாவில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரெஸ்ட் அச்சுறுத்தல்
கைது செய்யப்பட்ட முகமதுவிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், இதன் பின்னணியில் உள்ள முக்கிய ஹேக்கர்களை பிடிக்க போலிஸ் தனிப்படை அமைத்துத் தேடி வருகிறது.
இந்தியாவில் 2022 முதல் 2026 மே வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் சுமார் 2.97 லட்சம் சைபர் புகார்கள் பதிவாகி, ரூ.4,057.7 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காவல்துறை அல்லது அரசு அமைப்புகள் ஒருபோதும் வீடியோ காலில் விசாரணை நடத்திப் பணம் கேட்காது எனப் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.