50 ஆண்டுகளை பூர்த்தி செய்த சென்னை அண்ணா மேம்பாலம்
சென்னை மாநகரில் ஜெமினி பிரிட்ஜ் என்று அழைக்கப்படும் அண்ணா மேம்பாலம் திறக்கப்பட்டு இன்றோடு(ஜூலை.,1) 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. கடந்த 1973ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி இந்த அண்ணா மேம்பாலம் கட்டிமுடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சென்னையில் முதன்முதலாக கட்டப்பட்ட மேம்பாலம் என்னும் சிறப்பினை பெற்றுள்ள இது, தென்கிழக்கு ஆசியாவின் முதல் மேம்பாலமாகவும் திகழ்கிறது. இந்த மேம்பாலம் உள்ள இடத்தில் இருந்த ஜெமினி ஸ்டுடியோஸ் கட்டிடம் இடிக்கப்பட்டு, இந்த பாலம் கட்டப்பட்டதால் இன்றளவும் நம்முள் பலர் இதனை ஜெமினி பிரிட்ஜ் என்று அடையாளப்படுத்தி வருகிறோம். 1970-களிலேயே இப்பாலம் ரூ.66 லட்ச செலவில் 21 மாத கால அவகாசத்தில் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது.
1973ம் ஆண்டு முதல்வர் கருணாநிதி அவர்களால் திறந்துவைக்கப்பட்ட மேம்பாலம்
70.,மீட்டர் நீளமும், 48அடி அகலம் கொண்ட இம்மேம்பாலத்தில் கிட்டத்தட்ட 80 தூண்கள் வைத்து கட்டப்பட்டுள்ளது. இதன் முக்கிய இறப்பு என்னவெனில், தேவைப்பட்டால் இப்பாலத்தினை விரிவுபடுத்த இருபுறமும் ஏற்பாடுகளை செய்துள்ளனர். ஆனால் அது தற்போது வரை ஒரே மாதிரியான வடிவில் தான் உள்ளது. அப்போதைய காலகட்டத்தில் இந்தியாவின் மிக நீளமான மேம்பாலமாக அமைந்த இதனை 1973ம் ஆண்டு முதல்வர் கருணாநிதி அவர்கள் திறந்து வைத்து 'அண்ணா மேம்பாலம்' என்று பெயர் சூட்டியுள்ளார். பெரியார் மறைவிற்கு பிறகு 1974ம்ஆண்டு அவரது பிறந்தநாள் அன்று அவரது சிலையினையும் கருணாநிதி எம்.ஜி.ஆர். அவர்களின் கோரிக்கையினை ஏற்று நிறுவியுள்ளார். இந்நிலையில் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவுப்படி, ரூ.9கோடி செலவில் அண்ணா மேம்பாலத்தின் சீரமைப்பு பணிகள் நடந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.