தமிழகம் மற்றும் புதுச்சேரி பிளஸ் 2 பொது தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் - அதிர்ச்சி தகவல்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று(மார்ச்.,13) பிளஸ் 2 பொது தேர்வு துவங்கியது. முதல் நாளான இன்று மொழித்தேர்வு நடந்தது. இந்நிலையில் இன்று நடந்த இந்த பொதுத்தேர்வில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்னும் அதிர்ச்சி தகவலினை தற்போது பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் துவங்கிய பிளஸ் 2 பொது தேர்வில் 50,674 மாணவ-மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு எழுதவேண்டிய மொத்த 8,51,303 மாணவ மாணவிகளுள் 49,559 பேரும், தனித்தேர்வர்களும் 1,115 பேரும் தேர்வு எழுத வரவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் முதல்தாள் தேர்வு எளிதாக இருந்தது என தகவல்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2022-23ம் கல்வி ஆண்டிற்கான பொது தேர்வுகள் இம்மாதம் துவங்குகிறது. அதன்படி, இன்று(மார்ச்.,13) பிளஸ் 2 பொது தேர்வு துவங்கியுள்ளது. இந்த பொது தேர்வினை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேரடி பள்ளி மாணவர்கள் 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ-மாணவிகளும், தனி தேர்வர்களாக 23 ஆயிரத்து 747 பேர் என மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் எழுதுகிறார்கள் என தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த தேர்வானது காலை 10 மணிக்கு துவங்கி மதியம் 1.15 மணி வரை நடைபெற்றது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இந்த தேர்வானது நடத்தப்பட்டது. பொது தேர்வினை எழுதிமுடித்த மாணவர்கள், தமிழ் முதல்தாள் தேர்வு எளிதாக இருந்தது என தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.