ஜம்மு காஷ்மீரில் ராணுவ டிரக் மீது கிரெனெட் தாக்குதல், 5 ராணுவ வீரர்கள் பலி
ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தின் மச்சேடி பகுதியில் ராணுவ வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 6 பேர் காயமடைந்தனர். ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் நடந்த இரண்டு வெவ்வேறு என்கவுன்டர்களில் ஆறு பயங்கரவாதிகள் மற்றும் இரண்டு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட 24 மணி நேரத்திற்குப் பிறகு இந்த தாக்குதல் நடந்துள்ளது. கதுவாவில் இருந்து 150 கிமீ தொலைவில் ராணுவ வாகனங்கள் மச்செடி-கிண்ட்லி-மல்ஹர் சாலையில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 48 மணி நேரத்தில் ஜம்மு பகுதியில், இந்திய ராணுவம் மீது நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் இதுவாகும்.
அதிநவீன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல்
தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் அதிநவீன ஆயுதங்களை (M4 கார்பைன் துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகள்) பயன்படுத்தி உயிரிழப்புகளை அதிகப்படுத்தியதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. தாக்குதல் நடந்த பத்னோட்டா கிராமத்தில் சரியான சாலை இணைப்பு இல்லை என்றும், வாகனங்கள் மணிக்கு 10-15 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல முடியாது. ராணுவ வாகனங்கள் மிக மெதுவாக சென்றதால், பயங்கரவாதிகள் நிலப்பரப்பை சாதகமாக பயன்படுத்திக் கொண்டதாக தெரிகிறது. 2-3 பயங்கரவாதிகளும் 1-2 உள்ளூர் வழிகாட்டிகளும் மலைகளின் மேல் நின்று தாக்குதல் நடத்தியதகவும்,முதலில் ராணுவ வாகனங்கள் மீது கையெறி குண்டுகளை வீசி, பின்னர் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது. முந்தைய தாக்குதல்களைப் போலவே வாகனத்தின் ஓட்டுனரே முதல் இலக்கு என்று இந்தியா டுடே வட்டாரங்கள் தெரிவித்தன.