Loading...
இந்தியாவில் 5.64 கோடி வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவை: மாநிலங்களவையில் சட்ட அமைச்சர் தகவல்
இந்தியாவில் 5.64 கோடி வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவை

இந்தியாவில் 5.64 கோடி வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவை: மாநிலங்களவையில் சட்ட அமைச்சர் தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 03, 2026
07:49 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் உள்ள உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் மற்றும் கீழ்மை நீதிமன்றங்களில் ஒட்டுமொத்தமாக 5.64 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார். தேசிய நீதித்துறை தரவு வலைதளத்தின் (NJDG) தரவுகளின்படி, உச்ச நீதிமன்றத்தில் மட்டும் 96,000-க்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 10,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தீர்க்கப்படாமல் உள்ளன. மேலும், 558 வழக்குகள் 20 ஆண்டுகளுக்கும் மேலாகவும், 26 வழக்குகள் 30 ஆண்டுகளுக்கும் மேலாகவும் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.

தேக்கம்

உயர் நீதிமன்றங்களில் அதிகரிக்கும் தேக்கம்

நாட்டின் 25 உயர் நீதிமன்றங்களில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக 80,660 வழக்குகள் நிலுவையில் இருப்பது நீதித்துறை தேக்கத்தின் தீவிரத்தை உணர்த்துகிறது.

வழக்குகள் காலதாமதமாவதற்கு காரணமான விவகாரங்கள் நீதித்துறையின் பிரத்யேக எல்லைக்குள் வருவதாகவும், வழக்கு முடிவடைவதற்கான காலக்கெடுவை அரசு நிர்ணயிக்க முடியாது என்றும் அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

வழக்குகளின் தன்மை, ஆதாரங்களின் சிக்கலான நிலை, வழக்கறிஞர்கள், விசாரணை முகமைகள், சாட்சிகள் மற்றும் வழக்காடிகளின் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் வழக்குகள் காலதாமதமாகின்றன என அரசு தெரிவித்துள்ளது.

மேலும் போதிய எண்ணிக்கையிலான நீதிபதிகள், பணியாளர்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் இருப்பதும் விரைவான தீர்ப்பிற்கு அவசியம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சவால்கள்

நீதிபதி காலியிடங்கள் மற்றும் சவால்கள்

உச்ச நீதிமன்றம் காலியிடங்களை விரைவாக நிரப்பி வரும் வேளையில், உயர் நீதிமன்றங்கள் மற்றும் கீழ்மை நீதிமன்றங்களில் பெருமளவில் காலியிடங்கள் நிலவுகின்றன.

உயர் நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட 1,122 நீதிபதி பணியிடங்களில் 341 இடங்களும், கீழ்மை நீதிமன்றங்களில் 30,868 பணியிடங்களில் 7,311 இடங்களும் காலியாக உள்ளதே இந்த நிலுவைக்கு முக்கியக் காரணமாகும்.

ADVERTISEMENT