
நீலகிரி வனப்பகுதியில் அத்துமீறி 4 கி.மீ., தூரத்திற்கு சாலை அமைப்பு - 3 பேர் மீது வழக்குப்பதிவு
செய்தி முன்னோட்டம்
ஊட்டி-நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேவுள்ள மேடநாடு பகுதியில் அமைந்துள்ளது காப்புக்காடு.
இப்பகுதி ஓங்கி உயர்ந்த மரங்கள், பசுமையினை போர்த்தியதுபோல் தேயிலைத்தோட்டங்கள் என மிக எழில்மிகு இடமாக காட்சியளிக்கும்.
இந்த மேடநாடு வனப்பகுதியில் காட்டுயானைகள், சிறுத்தைகள், மான்கள், கரடிகள் போன்ற வன விலங்குகளும், இருவாச்சி என்னும் அரியவகை பறவை இனங்களும் வசித்து வருகிறது.
இதனால் இது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக வனத்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இப்பகுதியில் அமைச்சர் ஒருவரின் மருமகனுக்கு 100 ஏக்கரில் தேயிலைத்தோட்டம் உள்ளது.
இந்த தோட்டத்திற்கு செல்ல வனப்பகுதி கட்டுப்பாட்டில் உள்ள ஒரு சிறியப்பாதையினை அனுமதிப்பெற்று அவர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்நிலையில் திடீரென கனரக வாகனங்கள் செல்லும் வகையில் சாலையினை விரிவுபடுத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த வனத்துறை அதிகாரிகள் நேரில்சென்று ஆய்வு செய்துள்ளனர்.
வனப்பகுதி
விளக்கம் கேட்டு தோட்ட உரிமையாளருக்கு நோட்டீஸ்
அப்பொழுது ஏராளமான அரியவகை மரங்கள், மூலிகை செடிகள் முதலியன அழிக்கப்பட்டு சுமார் 4 கி.மீ., தூரத்திற்கு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டிருந்ததும்,
அரசுக்கு சொந்தமான வனப்பகுதியில் தனியார் தன்வசப்படுத்தி கேட் அமைக்கப்பட்டிருந்தமும் தெரியவந்துள்ளது.
இதனால் வனத்துறையினர் அந்த எஸ்டேட் மேலாளர் மற்றும் கனரக வாகன ஓட்டுநர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, ரோடு ரோலர், ஜேசிபி வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் இது குறித்து விளக்கம் கேட்டு தோட்ட உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மலைப்பகுதிகளில் கனரக வாகனங்கள் செல்லக்கூடாது என்னும் கடுமையான உத்தரவு உள்ள நிலையில், எப்படி ரோடு ரோலர் போன்ற வாகனங்கள் வனத்துறையினருக்கு தெரியாமல் உள்ளே நுழைந்தது என்று இயற்கை ஆர்வலர்கள் பல கேள்விகளை முன்வைத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.