Loading...
40 சொகுசு பங்களாக்கள் ஊழல்: ராஜஸ்தான் ஐஏஎஸ் ஐபிஎஸ் தம்பதி மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை
மூத்த ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் தம்பதி மீது ஊழல் தடுப்புப் பிரிவு (ACB) தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது

40 சொகுசு பங்களாக்கள் ஊழல்: ராஜஸ்தான் ஐஏஎஸ் ஐபிஎஸ் தம்பதி மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை

எழுதியவர் Vasuki
Nov 01, 2026
04:05 pm

செய்தி முன்னோட்டம்

ராஜஸ்தானில் ஒரே தனியார் நிறுவனத்திடமிருந்து ₹6.16 கோடிக்கு 40 சொகுசு பங்களாக்கள் மற்றும் காட்டேஜ்களை வாங்கி, பின்னர் அதே நிறுவனத்திற்கே குத்தகைக்கு விட்டு ஆண்டுதோறும் ₹1.80 கோடி வாடகை வருவாய் ஈட்டிய விவகாரத்தில், அம்மாநிலத்தைச் சேர்ந்த மூத்த ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் தம்பதி மீது ஊழல் தடுப்புப் பிரிவு (ACB) தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது. அரசுப் பதவியைத் தவறாகப் பயன்படுத்தி குறிப்பிட்ட நிறுவனத்திற்கு சலுகைகள் வாரி வழங்கியதன் மூலம் அரசுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதைத் தொடர்ந்து, இரு அதிகாரிகளையும் ராஜஸ்தான் அரசு பணியிட மாறுதல் காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பங்களா கொள்முதல்

சலுகைகள் வழங்கிய பின்னணி

ராஜஸ்தான் தொழில் துறையின் கூடுதல் தலைமை செயலாளராகப் பணியாற்றிய மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஷிகர் அகர்வால் மற்றும் அவரது மனைவியான மூத்த ஐபிஎஸ் அதிகாரி பிரஷாகா மாத்தூர் ஆகிய இருவர் மீதும் இந்த ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அனந்தா என்ற பிராண்ட் பெயரில் சொகுசு விடுதிகளை நடத்தி வரும் கோயல் ஃபேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு, ஷிகர் அகர்வால் உதய்பூர் ஆட்சியராகவும், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைவராகவும், தொழில்துறை செயலராகவும் இருந்தபோது விதிமுறைகளை மீறி சலுகைகள் அளித்ததாகக் கூறப்படுகிறது.

கட்டுமான விதிகளில் தளர்வுகள், முறையான சான்றிதழ் சோதனைகள் இன்றி ஒப்புதல் அளித்தல் மற்றும் சிறப்பு நிதிச் சலுகைகள் வழங்கியதற்கு பிரதிபலனாகவே இந்த சொத்துகள் கைமாறியுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இரட்டை லாபம்

2.5 ஆண்டுகளில் 40 சொகுசு பங்களாக்கள்

கடந்த இரண்டரை ஆண்டுகளில் அகர்வால் குடும்பத்தினர் உதய்பூரின் புஜ்தா பகுதியில் உள்ள அனந்தா ரிசார்ட்டில் 20 காட்டேஜ்களையும், அல்வாரின் அஜப்கரில் 20 சொகுசு பங்களாக்களையும் மிகக் குறைந்த விலைக்கு வாங்கியுள்ளனர்.

உதய்பூரில் தலா ₹15 லட்சத்திற்கும், அல்வாரில் தலா ₹16.5 லட்சத்திற்கும் என மொத்தம் ₹6.16 கோடிக்கு இந்த 40 சொத்துகளும் ஷிகர் அகர்வால், அவரது மனைவி, இரு மகன்கள் மற்றும் மாமனார்-மாமியார் பெயரில் வாங்கப்பட்டுள்ளன.

பின்னர் இந்த 40 பங்களாக்களையும் விற்ற அதே நிறுவனத்திற்கே மீண்டும் குத்தகைக்கு விட்டு, உதய்பூரிலிருந்து ₹80 லட்சமும், அல்வாரிலிருந்து ₹1 கோடியும் என ஆண்டுக்கு மொத்தம் ₹1.80 கோடி குத்தகை வருமானம் ஈட்டியுள்ளனர்.

ADVERTISEMENT

17A பிரிவு விசாரணை

சொத்துக் கணக்கு முரண்பாடு

அரசுக்கு சமர்ப்பித்த ஆண்டு சொத்துக் கணக்கு விவரங்களிலும் பெரும் முரண்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

2026 ஜனவரியில் ஷிகர் அகர்வால் தனக்கு 14 சொத்துகள் மட்டுமே இருப்பதாக கணக்கு காட்டிய நிலையில், அடுத்த நாள் அவரது ஐபிஎஸ் மனைவி பிரஷாகா மாத்தூர் தனக்கு எந்தவொரு சொத்தும் இல்லை எனத் தாக்கல் செய்துள்ளார்.

ஆனால், தனது மகன்களின் பவர் ஆஃப் அட்டார்னி மூலம் மாத்தூரே பெரும்பாலான பதிவுகளை முன்னின்று முடித்துள்ளார்.

வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவிப்பு மற்றும் அதிகார முறைகேடு தொடர்பாக ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 17A-ன் கீழ் முழுமையான விசாரணை நடத்த மாநில அரசு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கியுள்ளது.

ADVERTISEMENT