சிகிச்சை செலவை 100 மடங்கு வரை குறைக்கும் நான்கு புதிய இந்திய மருந்துகள் கண்டுபிடிப்பு
மிகவும் அரிதான மற்றும் சிக்கலான சில மரபியல் நோய்களுக்கு குறைந்த விலையில் சிகிச்சை வழங்கும் வகையிலான மருத்துகளைக் கண்டறிந்திருக்கின்றன இந்திய மருந்து நிறுவனங்கள். கடந்த ஓராண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, இந்திய அரசின் உதவியுடன் நான்கு அரிய நோய்களுக்கான மருந்துகளைக் கண்டறிந்திருக்கின்றனர். இந்தப் புதிய மருந்துகளின் மூலம் குறிப்பிட்ட மரபியல் நோய்களின் சிகிச்சைகளுக்கான செலவு 100 மடங்கு வரை குறைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 8.4 கோடி முதல் 10 கோடி மக்கள் அரிய வகை நோய்களினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த நோய்களில் 80% நோய்கள் மரபியல் நோய்களாகவே இருக்கின்றன. இந்த நோய்களை குழந்தை பிறந்த சில ஆண்டுகளிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கவில்லை என்றால், 10 வயதிற்குள்ளாகவே இறப்பைச் சந்திக்கும் அபாயம் இருக்கிறது.
அரிய வகை மரபியல் நோய்களுக்கான மருந்துகள்:
டைரோசினேமியா டைப் 1 (Tyrosinemia type 1) என்ற நோயின் சிகிச்சைக்கு ஆண்டுக்கு ரூ.2.2 கோடி முதல் ரூ.6.5 கோடி வரை செலவு செய்ய வேண்டியிருக்கும். குழந்தைகளில் அதிகம் கண்டறியப்படும் இந்த மரபியல் நோய்க்கு நிதிசினோன் (Nitisinone) என்ற மருந்தைக் கண்டறிந்ததன் மூலமாக, சிகிச்சைக்கான செலவை ஆண்டுக்கு ரூ.2.5 லட்சமாக குறைத்திருக்கிறார்கள். அதேபோல், கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கம், எலும்பு வலி ஆகியவற்றை ஏற்படுத்தும் காச்சர் (Gaucher) என்ற நோய்க்கு எலிகுலுஸ்டாட் என்ற மருந்தைக் கண்டறிந்திருக்கின்றனர். இதன் மூலம் அந்த நோயின் சிகிச்சைக்கான செலவு ரூ.1.8 கோடி முதல் ரூ.3.6 கோடியிலிருந்து ரூ.3.6 லட்சமாகக் குறைந்திருக்கிறது.
பிற நோய்களுக்கான மருந்துகள்:
மேலும், வில்சன் (Wilson) நோய்க்கு ட்ரியன்டைன் (Trientine) மருந்தைக் கண்டறிந்ததன் மூலம், அதற்கான செலவு ஆண்டுக்கு ரூ.2.2 கோடியிலிருந்து ரூ.2.2 லட்சமாகக் குறைந்திருக்கிறது. டிராவட் (Dravet) நோய்க்கு கேன்னபிடால் (Cannabidiol) மருந்தைக் கண்டறிந்ததன் மூலம், அதன் சிகிச்சைக்கான செலவு ரூ.7-34 லட்சத்திலிருந்து ரூ.1-5 லட்சமாகக் குறைந்திருக்கிறது. 13 நோய்களுக்கான விலை குறைவாந மருந்துகளைக் கண்டறியத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது வரை நான்கு நோய்களுக்கான மருந்துகள் கண்டறியப்பட்டிருக்கின்றன. ஒரு முறை சிகிச்சைக்கு ரூ.16 கோடி தேவைப்படும் ஸ்பைனல் மஸ்குலார் அட்ரோபி நோய்க்கான குறைந்த விலை மருந்தைக் கண்டறியும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.