உத்தரகாண்ட்டில் தொடரும் கலவரம்: 4 பேர் பலி, 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் படுகாயம்
உத்தரகாண்டின் ஹல்த்வானியில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட மதரஸா மற்றும் மசூதியை இடித்ததால் ஏற்பட்ட வன்முறையில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்தனர் மற்றும் 100க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். மேலும், வாகனங்கள் மற்றும் காவல் நிலையத்திற்கு தீ வைத்து கற்களை வீசியதை அடுத்து, அங்கே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. செய்தி நிறுவனமான பிடிஐ படி, காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் போலீஸ்காரர்கள். மீதமுள்ளவர்கள் உள்ளூர் மதரஸா மற்றும் அதன் வளாகத்தில் உள்ள மசூதியை இடிப்பதில் ஈடுபட்ட நகராட்சி ஊழியர்கள். ஹல்த்வானியில் நடந்த வன்முறையில் 4 பேர் பலியாகியுள்ளதாக மாநில சட்டம் மற்றும் ஒழுங்கு ஏடிஜி, ஏ.பி. அன்ஷுமன், செய்தி நிறுவனமான ஏஎன்ஐயிடம் உறுதிப்படுத்தினார்.
இணைய சேவைகள் முடக்கம்
மாநிலம் முழுவதும் உச்சக்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக உத்தரகாண்ட் அரசு உறுதி செய்துள்ளது. வன்முறையைத் தொடர்ந்து இணைய சேவைகள் இடைநிறுத்தப்பட்டன. மேலும் நைனிடாலில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூடவும் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. வன்முறை அதிகரித்ததால், ஹல்த்வானியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டன. மாநிலத் தலைநகர் டேராடூனில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி, தலைமைச் செயலாளர் ராதா ரதுரி மற்றும் டிஜிபி அபினவ் குமார் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுடன் ஹல்த்வானியின் நிலைமையை ஆய்வு செய்ய ஆலோசனை நடத்தினார். அனைவரையும் அமைதி காக்க வேண்டும் என்றும், அராஜகம் செய்பவர்களை கடுமையாகக் கையாளுமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.
எதற்காக இந்த கலவரம்?
சட்ட விரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தில், மதரஸாவும், மசூதியும் இருந்ததாகவும், நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க இடிப்புகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார். மசூதி மற்றும் மதரஸாவை இடிக்க தொடங்கியதும், ஆத்திரமடைந்த மக்கள், பெரும் எண்ணிக்கையில் கூடி, இடிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். ஒரு புல்டோசர் மதரஸா மற்றும் மசூதியை இடித்துத் தள்ளியதும், கூடியிருந்த கும்பல், காவல்துறை அதிகாரிகள், மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது கற்களை வீசியது. இதில் பலர் காயமடைந்தனர். போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கும்பலை கலைக்க முயன்றனர். இருப்பினும், போலீஸ் ரோந்து கார் உட்பட பல வாகனங்களுக்கு கும்பல் தீ வைத்ததால் பதற்றம் அதிகரித்தது. இதில் பன்பூல்புரா காவல் நிலையத்திற்கும் தீ வைக்கப்பட்டது.