இந்தியாவில் 35% பேருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பதாக தகவல்
இந்தியா நாட்டின் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் மத்திய சுகாதாரத்துறை இணைந்து நிதி உதவி செய்து நாடு முழுவதும் 1,13,043 பேருக்கு மருத்துவ பரிசோதனையினை செய்துள்ளது. இந்த ஆய்வானது அனைத்து மாநிலங்களிலும் உள்ள 20 வயதுக்கு மேற்பட்ட மக்களிடையே நடத்தப்பட்டுள்ளது என்று தெரிகிறது. 79 ஆயிரத்திற்கும் அதிகமான ஊரக பகுதிகளை சேர்ந்தவர்கள் மற்றும் 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நகர்ப்புற பகுதிகளை சேர்ந்தவர்களிடம் இருந்து ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு டயபட்டிக் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள் நேற்று(ஜூன்.,9) சென்னை மாநகராட்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சென்னை சர்க்கரை நோய் ஆராய்ச்சி நிறுவன தலைவர் டாக்டர் மோகன், தலைமை நிர்வாகியான டாக்டர் ஆர்.எம்.அஞ்சனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சர்க்கரை நோய் பாதிப்பானது 11.4% பேருக்கு உள்ளது
இந்தியா முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் உயர் ரத்தஅழுத்த பாதிப்பானது 35% பேருக்கும், சர்க்கரை நோய் பாதிப்பானது 11.4% பேருக்கும் இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் சர்க்கரை நோயின் ஆரம்பநிலை பாதிப்புடையோர் 15.3% என்றும் இந்த மருத்துவ ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய மருத்துவர்கள், "28மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் தொற்றா நோய்களின் பாதிப்புகளை கண்டறிய மேற்கொண்ட ஆய்வில் 31.5 கோடி மக்களுக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. அதனுள் 52%பேர் பஞ்சாப் மாநிலத்தினை சேர்ந்தவர்கள் ஆவர். அதேபோல் வயிற்றுப்பருமன் காரணமாக 35 கோடி பேரும், 25.4கோடி பேர் உடல் பருமனாலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். புதுச்சேரியில் இப்பாதிப்பு உடையோர் அதிகளவில் இருப்பதாகவும் ஆய்வு முடிவுகள் மூலம் தெரியவந்துள்ளது" என்று கூறினர்.