தமிழகத்தில் மேலும் 300 நியாயவிலை கடைகளில் தக்காளி விற்பனை
கடந்த சில நாட்களாக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த விலை உயர்வு தமிழ்நாடு மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது. கனமழை மற்றும் வரத்து குறைவு காரணமாக தக்காளியின் விலை உயர்ந்துள்ளது என்று வியாபாரிகள் கூறிவருகிறார்கள். இதனிடையே தக்காளியினை மக்களுக்கு குறைவான விலையில் விற்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக தக்காளியினை, கொள்முதல் விலையில், நியாயவிலை கடைகளில் சோதனை முயற்சியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடவேண்டியவை. சோதனை முயற்சி வெற்றிபெற்றால், மேலும் பல ஊர்களுக்கு இத்திட்டத்தை விரிவுபடுத்தப்போவதாக அதிகாரிகளும், அமைச்சரும் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.
மளிகை பொருட்களைகூட்டுறவு பல்பொருள் அங்காடி மூலம் விற்க முடிவு
இந்நிலையில், இன்று(ஜூலை.,10) தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காய்கறிகள் விலையுயர்வு குறித்து உயரதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் மத்தியில் ஆலோசனை நடத்தியுள்ளார். இதனை தொடர்ந்து, மேலும் 300 நியாயவிலை கடைகளில் தக்காளி விற்பனையினை விரிவுபடுத்த முதல்வர் தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், மற்ற காய்கறிகளின் விலை உயர்வினை கருத்தில் கொண்டு, உழவர் சந்தையில் விற்பனையினை அதிகரிக்கவும், நகர பகுதிகளில் நடமாடும் காய்கறி அங்காடிகள் மூலம் அதிகளவு காய்கறிகளை, குறைந்த விலையில் விற்கவும் நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு போன்ற அத்தியாவசிய மளிகை பொருட்களை, தமிழக அரசின் கூட்டுறவு பல்பொருள் அங்காடி மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்யவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.