ஒடிசாவில் இரண்டு ரயில்களால் ஏற்பட்ட பெரும் விபத்து: பலர் உயிரிழப்பு
செய்தி முன்னோட்டம்
ஒடிசாவில் ஒரு ரயில் தடம் புரண்டு இன்னொரு ரயில் மீது மோதியதால் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 300 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனகா பஜார் நிலையம் அருகே இன்று இரவு 7.20 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது.
முதலில், யஷ்வந்த்பூர்-ஹவுரா எக்ஸ்பிரஸின் சில பெட்டிகள் தடம் புரண்டன.
இந்த தடம் புரண்ட ரயில், அந்த வழியாக வந்து கொண்டிருந்த, கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் கோரமண்டல் எக்ஸ்பிரஸின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.
தற்போது, தடம் புரண்ட பெட்டிகளுக்கு அடியில் பலர் சிக்கியுள்ளனர். உள்ளூர்வாசிகள் அவர்களை மீட்க அவசர சேவை பணியாளர்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.
details
பிரதமர் மோடி ரயில்வே அமைச்சரிடம் நிலைமையைக் கேட்டறிந்தார்
ஒடிசா பேரிடர் விரைவு நடவடிக்கைப் படையின்(ODRAF) நான்கு பிரிவுகளும், 60 ஆம்புலன்ஸ்களும் காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்த விபத்து தன்னை துயரில் ஆழ்த்தியுள்ளது என்று கூறிய பிரதமர் மோடி, ரயில்வே அமைச்சர் அஸ்வினி-வைஷ்ணவுடன் நிலைமையைக் கேட்டறிந்தார்.
ஒடிஷாவின் சிறப்பு நிவாரண செயலாளர் சத்யபிரதா சாஹூ மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் பிரமிளா மாலிக் ஆகியோர் விபத்து நடந்த இடத்திற்கு சென்றுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அமைச்சர் தலைமையிலான குழுவை மேற்கு வங்க மாநிலம் சம்பவ இடத்துக்கு அனுப்ப உள்ளதாக அம்மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
ஒடிசா அரசு வெளியிட்டுள்ள ஹெல்ப்லைன் எண்: 06782-262286
ரயில்வே உதவி எண்கள்: 033-26382217 (ஹவுரா), 8972073925 (காரக்பூர்), 8249591559 (பாலசோர்) மற்றும் 044- 25330952 (சென்னை).