ஆந்திராவில் இந்து கோயில்களை பாதுகாக்கும் பொருட்டு 3,000 கோயில்கள் அமைப்பு
ஆந்திர அறநிலையத்துறை அமைச்சரும், துணை முதல்வருமான கோட்டு சத்தியநாராயணா ஓர் அறிக்கையினை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர், ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அம்மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு கோயில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதன்படி, இந்து மத நம்பிக்கையை பாதுகாக்கவும், அது குறித்து பரப்பவும் கோயில் கட்டுமான பணிகள் துவங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து ஆந்திர மாநிலத்தில் 3,000 கோயிகள் கட்ட திட்டமிடப்பட்டு அதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கான நிதி ஒதுக்கீடு குறித்தும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
திருப்பதி தேவஸ்தானம் கோயில் ஒன்றுக்கு ரூ.10 லட்சம் நன்கொடை அறிவிப்பு
ஆந்திர மாநில அரசின் உத்தரவுப்படி கோயில் கட்டுவதற்கு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீவாரி அறக்கட்டளை, கோயில் ஒன்றுக்கு ரூ.10 லட்சம் நன்கொடை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் 1,330 கோயில்களின் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. அதுதவிர, மேலும் 1,465 கோயில்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து, சில சட்டப்பேரவை உறுப்பினர்களின் கோரிக்கையின் பேரிலும் கூடுதலாக 200 கட்டமைக்கப்படலாம் என்றும் தெரிகிறது. இந்த கோயில் கட்டும் திட்டமானது தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல்வரின் விருப்பப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு இந்து கோயில் இருப்பதை உறுதி செய்வோம் என்றும் துணை முதல்வர் உறுதியளித்துள்ளார்.