கால தாமதம் செய்த காரணத்திற்காக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு மீண்டும் அபராதம்
கடந்த நவம்பர் மாதம் ஏர் இந்தியா விமானத்தில் ஒரு வயதான பயணி மீது சிறுநீர் கழித்த சம்பவம் வெளிவந்ததை அடுத்து, அவ்வாறு செய்த சங்கர் மிஸ்ரா என்பவர் கைது செய்யப்பட்டார். நவம்பர் மாதம் நடந்த நிகழ்வை பற்றி பல்வேறு தகவல் வெளியாகி வந்துள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து துறை, ஏர் இந்தியா நிறுவனம் சரியாக கையாளத் தவறியதால், 30 லட்ச ரூபாய் அபராதம் விதித்தது. இந்த சம்பவம் வழக்காக பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. சம்பவம் நடந்து பல நாட்களாகியும் நிறுவனம் தரப்பில் எந்த தகவலும் வெளியாகவில்லை, விமான போக்குவரத்து இயக்குனரகத்துக்கும் தகவல் வழங்கப்படவில்லை. இதனால் நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதை அடுத்து, மீண்டும் ஒரு சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது.
பெண் அமரும் இருக்கையில் சிறுநீர் கழித்த சம்பவம் - 10 லட்சம் அபராதம்
பயணி ஒருவர் விமானத்தில் சிறுநீர் கழித்த சம்பவத்தில் பெண் பயணியின் போர்வை நனைந்தது. இந்த விவகாரம் குறித்து செய்திகள் வெளிவந்த நிலையில், இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் நடந்த சம்பவத்திற்கு ஆண் பயணி மன்னிப்பு கேட்டு சமரசம் செய்து கொண்டதாக தகவல்களும் வெளியானது. இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது. சம்பவம் நடந்து ஒரு மாத காலம் தகவல் கொடுக்காமல் தாமதித்ததற்காக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டதாக விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஏர் இந்தியா நிறுவனத்திற்கு இது இரண்டாவது முறை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.