வாகன சோதனையில் சிக்கிய கார்- 2.2 கிலோ கஞ்சா, 2 செல்போன்கள் பறிமுதல்
தமிழகத்தில் போதை பொருள் விற்பனைகளை முற்றிலும் தடுக்க போதைத்தடுப்பு பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு போதைபொருள் கடத்தலை தடுக்க கும்மிடிப்பூண்டி அருகே எளாவூரில் சோதனைச் சாவடியில் போலீசார் 24 மணிநேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், நேற்று அவ்வழியாக சொகுசுகார் ஒன்று போலீஸ் நிறுத்தக்கூறியும் நிறுத்தாமல் சென்றுள்ளது. அதனுள் ஏதோ பார்சல்கள் இருந்ததால் சந்தேகமடைந்த போலீசார் அந்த காரை மடக்கி பிடிக்குமாறு ஊத்துக்கோட்டை சோதனைசாவடியில் உள்ள மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் அளித்தார்கள். அதன் பேரில், மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் தேவிகா, எஸ்.ஐ.க்கள் ஆறுமுகம், அன்பு ஆகியோர் ஊத்துக்கோட்டை அண்ணா சிலை நான்கு முனை சந்திப்பில் தீவிரமாக சோதனை செய்துள்ளனர்.
காரை மடக்கி பிடித்த போலீசார் - 2கிலோ 200 கிராம் கஞ்சா,2 செல்போன்கள் மற்றும் கார் பறிமுதல்
அப்பொழுது அவ்வழி வந்த குறிப்பிட்ட காரை மடக்கி பிடித்த அவர்கள், அதனுள் இருந்த ட்ரைவர் மற்றும் இன்னொரு நபரை பிடித்து விசாரணை செய்துள்ளனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் காரை போலீசார் சோதனை செய்துள்ளனர். அப்போது, காரில் 2 கிலோ 200 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, அந்த கஞ்சாவையும், அதனை கடத்த பயன்படுத்திய கார் மற்றும் 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் பிடிபட்டோரை விசாரித்ததில் ஒருவர் சென்னையை சேர்ந்த கோபி(22), மற்றும் மும்பையை சேர்ந்த அவர் கூட்டாளி சுரேஷ்(35) என்றும் தெரியவந்துள்ளது. ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி சென்னையில் விற்க முயற்சி செய்த இவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.