Page Loader
திருப்பதியில் கடத்தப்பட்ட சென்னையை சேர்ந்த 2 வயது குழந்தை மீட்பு 
திருப்பதியில் கடத்தப்பட்ட சென்னையை சேர்ந்த 2 வயது குழந்தை மீட்பு

திருப்பதியில் கடத்தப்பட்ட சென்னையை சேர்ந்த 2 வயது குழந்தை மீட்பு 

எழுதியவர் Nivetha P
Oct 03, 2023
02:55 pm

செய்தி முன்னோட்டம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாதம் மற்றும் தொடர் விடுமுறை என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. சுமார் 10 கி.மீ., நீண்ட வரிசையில், 48 மணிநேரத்திற்கு மேலாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த கூட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த தம்பதியினரின் 2 வயது ஆண் குழந்தை கடத்தல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை தற்போது ஏற்படுத்தியுள்ளது. சென்னை வளசரவாக்கம் பகுதியினை சேர்ந்தவர் சந்திரசேகர், இவரது மனைவி மீனா. இவர்கள் தங்கள் 2 மகன்களுடன் சாமி தரிசனம் செய்ய திருப்பதி வந்துள்ளனர். அதன்படி அவர்கள் நேற்று(அக்.,3)நள்ளிரவு சாமி தரிசனம் செய்து முடித்த நிலையில், சென்னைக்கு திரும்ப மலையடிவார பேருந்து நிலையத்தில் இரவு தங்கியதாக கூறப்படுகிறது.

விசாரணை 

குழந்தையை கடத்திய மர்ம நபரை தேடும் பணி தீவிரம் 

அங்கு இவர்கள் உறங்கிக்கொண்டிருந்த நிலையில், அதிகாலை கிட்டத்தட்ட 2.20 மணிக்கு இவர்களது 2 வயது ஆண் குழந்தை அருள்முருகன் காணாமல் போயுள்ளார். இதனால் பதறிப்போன அவர்கள் பக்கத்திலுள்ள அனைத்து இடங்களிலும் தேடிப்பார்த்துள்ளனர். ஆனால் குழந்தை கிடைக்கவில்லை என்பதால் காவல்துறைக்கு புகாரளித்துள்ளார்கள். அந்த புகாரின்பேரில் காவல்துறையினர் உடனடியாக பேருந்து நிலையத்திலிருந்த சிசிடிவி காட்சியினை ஆய்வுச்செய்தனர். அதில் 2.10 மணியளவில் மர்மநபர் ஒருவர் குழந்தையை தூக்கிச்சென்றது பதிவாகியிருந்தது. இதனையடுத்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குழந்தையை மீட்கும் பணியில் காவல்துறை ஈடுபட்டது. கடத்தப்பட்ட குழந்தை மாதவமலை பகுதியிலுள்ளதாக கண்டறியப்பட்ட நிலையில், காவல்துறை அங்கு விரைந்து குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஓப்படைத்துள்ளனர். எனினும் குழந்தையை கடத்திய சுதாகரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.