கோவிலில் இஸ்லாமியர்கள் வேலை செய்யக்கூடாது: மத்திய பிரதேச அரசு
மத்தியப் பிரதேசத்தில் உள்ள மைஹார் நகரம் மா சாரதா கோவிலுக்கும், பாபா அலாவுதீன் கான் நிறுவிய மைஹார் கரானாவுக்கும் பெயர் பெற்ற நகரமாகும். ஆனால், இந்த புகழ்பெற்ற கோயிலின் நிர்வாகக் குழுவில் இனி முஸ்லிம் ஊழியர்கள் பணியாற்ற முடியாது என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மாநில சமய அறநிலையத்துறை மற்றும் அறநிலையத்துறை அமைச்சகத்தின் துணைச் செயலர் புஷ்பா காலேஷ் கையெழுத்திட்ட ஒரு கடிதத்தில், ஜனவரி 17ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு இணங்கி, அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோயில் கமிட்டிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 1988 முதல் மா சாரதா கோவிலில் பணிபுரியும் இரண்டு முஸ்லிம் ஊழியர்கள் இதனால் வேலையை இழக்கவுள்ளனர். மத அடிப்படையில் எந்த ஊழியரையும் வேலையில் இருந்து நீக்கக்கூடாது என்று மாநில அரசின் விதிகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
நகரத்திற்குள் இறைச்சி மற்றும் மதுபானத்திற்கு தடை
எனினும், மாநில அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. மைஹார் நகரில் இறைச்சி மற்றும் மது விற்பனைக்கு தடை விதிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வலதுசாரி ஆதரவாளர்களான விஷ்வ ஹிந்து பரிஷத்(VHP) மற்றும் பஜ்ரங் தள் ஆகிய அமைப்பினர் ஜனவரி மாதம் கலாச்சாரம், மத நம்பிக்கை மற்றும் அறநிலையத்துறை அமைச்சரான உஷா சிங் தாக்கூரை அணுகியதை அடுத்து இந்த இரண்டு உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோயில் நிர்வாகக் குழுவின் தலைவரான மாவட்ட ஆட்சியர் அனுராக் வர்மா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மேலோட்டமாகப் பார்த்தால், இந்த உத்தரவு இரண்டு ஊழியர்களை மட்டுமே பாதிக்கும். ஆனால், இது இஸ்லாமியர்களுக்கு எதிரான பெரும் ஒடுக்குமுறை என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.