காங்கிரஸ் தலைவரின் மொபைலை 'ஹேக்' செய்து பணம் பறிக்க முயன்ற இருவர் கைது
மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் போனை ஹேக் செய்து காங்கிரஸ் தலைவர்களிடம் பணம் பறிக்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கமல்நாத்தின் மொபைல் ஃபோனை 'ஹேக்' செய்த இருவர், காங்கிரஸ் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்க தொடங்கியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இரு ஹேக்கர்களும் கமல்நாத்தின் மொபைலில் இருந்து காங்கிரஸ் பொருளாளர் அசோக் சிங்கிற்கு 'கால்' செய்து ரூ.10 லட்சம் கேட்ட விவரமும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதவிர, இந்தூர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் சுர்ஜித் சிங் சதா, குவாலியர் காங்கிரஸ் எம்எல்ஏ, சதீஷ் சிகர்வார், முன்னாள் காங்கிரஸ் பொருளாளர் கோவிந்த் கோயல் ஆகியோரின் மொபைலுக்கும் அந்த ஹேக்கர்கள் அழைப்பு விடுத்திருக்கின்றனர்.
திட்டம்தீட்டி ஹேக்கர்களை மடக்கி பிடித்த காங்கிரஸ் தலைவர்கள்
இந்த அழைப்புகளால் சந்தேகமடைந்த கோவிந்த் கோயல், பணம் கேட்டு தனக்கு வரும் அழைப்புகள் குறித்து கமல்நாத்திடம் கேட்டிருக்கிறார். அதன் பிறகே, கமல்நாத்தின் மொபைல் ஃபோனை 'ஹேக்' செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த இரண்டு பேரையும் பிடிக்க, பணத்தை தருவதாக உறுதியளித்த கோயல், ஹேக்கர்களை தனது வீட்டிற்கு வருமாறு அழைத்தார். பணத்தை பெறுவதற்காக அவர்கள் இருவரும் கோவிந்த் கோயலின் பங்களாவுக்கு வந்தவுடன், அவர்களை சுற்றி வளைத்த கோயலின் ஆட்கள், குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சாகர் சிங் பர்மர் மற்றும் பிந்து பர்மர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.