டாடாநகர் - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் AC பெட்டியில் பயங்கர தீ விபத்து
செய்தி முன்னோட்டம்
ஆந்திர மாநிலம் அனகாபல்லி அருகே இன்று அதிகாலை டாடாநகர் - எர்ணாகுளம் விரைவு ரயிலில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி பயணி ஒருவர் உயிரிழந்தார். ரயிலின் இரண்டு ஏசி பெட்டிகள் தீயில் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. ஜார்கண்ட் மாநிலம் டாடாநகரிலிருந்து கேரளா நோக்கி சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில், இன்று அதிகாலை சுமார் 1:00 மணியளவில் விசாகப்பட்டினம் அருகே உள்ள எலமஞ்சிலி ரயில் நிலையத்தைக் கடந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
உயிரிழப்பு
தீ விபத்தில் முதியவர் உயிரிழப்பு
ஜார்கண்ட் மாநிலம் டாடாநகரிலிருந்து கேரளா நோக்கி சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில், இன்று அதிகாலை சுமார் 1:00 மணியளவில் விசாகப்பட்டினம் அருகே உள்ள எலமஞ்சிலி ரயில் நிலையத்தைக் கடந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பேன்ட்ரி காருக்கு அருகில் அமைந்துள்ள B1 மற்றும் M2 ஏசி பெட்டிகளில் தீப்பிழம்புகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. புகை மூட்டத்தைக் கவனித்த லோகோ பைலட் உடனடியாக ரயிலை நிறுத்தி அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தார். எனினும், இந்த விபத்தில் பி-1 பெட்டியில் பயணம் செய்த 70 வயதான சந்திரசேகர் சுந்தரம் என்ற முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். இவர் விஜயவாடாவை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மீட்பு
பயணிகள் மீட்பு
தீ பரவிய பெட்டிகளில் இருந்த சுமார் 150-க்கும் மேற்பட்ட பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இதர பெட்டிகளுக்கு தீ பரவாமல் தடுக்க, பாதிக்கப்பட்ட இரண்டு பெட்டிகளும் உடனடியாக ரயிலிலிருந்து பிரிக்கப்பட்டன. தகவலின் பேரில் அனகப்பள்ளி, எலமஞ்சிலி மற்றும் நக்கப்பள்ளி ஆகிய இடங்களிலிருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பல மணி நேரம் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அவர்களின் முயற்சிகள் இருந்தபோதிலும், பாதிக்கப்பட்ட இரண்டு பெட்டிகளில் இருந்த அனைத்து பயணிகளின் உடைமைகளும் முற்றிலுமாக எரிந்து நாசமாகின. இந்த சம்பவம் காரணமாக விசாகப்பட்டினத்தில் இருந்து விஜயவாடா நோக்கிச் செல்லும் பல ரயில்கள் தாமதமாகின.