டெல்லியில் மீண்டும் 'Severe' நிலையை எட்டிய காற்று மாசுபாடு: கடும் பனிமூட்டத்தால் விமானப் போக்குவரத்து பாதிப்பு
செய்தி முன்னோட்டம்
டெல்லியில் இன்று காலை கடும் பனிமூட்டத்துடன் கூடிய நச்சுப் புகை சூழ்ந்ததால், காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து 'கடுமையான' பிரிவை எட்டியுள்ளது. இதன் காரணமாக டெல்லி விமான நிலையம் புதிய பயண ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது. டெல்லியின் சராசரி காற்று தரக் குறியீடு (AQI) இன்று காலை 400-ஐக் கடந்து 'Severe' பிரிவை எட்டியுள்ளது. ஆனந்த் விஹார், வஜிர்பூர் போன்ற சில பகுதிகளில் காற்றின் தரம் 440-க்கும் மேல் பதிவாகியுள்ளது. இன்று காலை டெல்லியில் நிலவிய அடர் பனிமூட்டம் காரணமாக சாலை மற்றும் விமான ஓடுதளங்களில் பார்வைத் திறன் 300 மீட்டருக்கும் கீழாகக் குறைந்தது. இதனால் நொய்டா மற்றும் டெல்லியின் பல பகுதிகளில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி மெதுவாக செல்லும் நிலை ஏற்பட்டது.
எச்சரிக்கை
விமான நிலைய எச்சரிக்கை
டெல்லி விமான நிலையத்தின் (DIAL) தரப்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், குறைந்த பார்வை திறன் காரணமாக CAT-III தொழில்நுட்ப நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில விமானங்கள் தாமதமாகவோ அல்லது ரத்து செய்யப்படவோ வாய்ப்புள்ளதால், பயணிகள் தங்களது விமான நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு நேரத்தை உறுதிப்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லி வரும் பல ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பனிமூட்டம் மற்றும் குளிரின் தாக்கம் வரும் ஜனவரி 1-ம் தேதி வரை தொடர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரிக்கை விடுத்துள்ளது.