
குப்பை தொட்டியில் கிடந்த 2 பெண் சிசுக்கள் - வீசி சென்றவர்கள் யார்?
செய்தி முன்னோட்டம்
திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி பகுதியில் அமைந்துள்ள காளியம்மன் கோயில் அருகேயுள்ள குப்பை தொட்டியில் தெரு நாய்கள் கூட்டம் இன்று(ஜூலை.,30) அதிகாலை வேளையில் சுற்றி வந்த வண்ணம் இருந்துள்ளது.
இதனை கண்டு சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் நாய்களை விரட்டி விட்டு குப்பை தொட்டியினை பார்த்துள்ளனர்.
அப்போது அதில் 2 பெண் சிசுக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதனையடுத்து அவர்கள் இது குறித்து அப்பகுதி தூய்மை பணியாளர்களுக்கும், காவல்துறைக்கும் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதற்குள் இந்த விஷயம் அப்பகுதி முழுவதும் பரவிய நிலையில், ஏராளமான மக்கள் குப்பை தொட்டியருகே கூடினர்.
விசாரணை
தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ள காவல்துறை
இதனிடையே அங்குவந்த நகர் தெற்கு காவல்துறையினர் 2 பெண் சிசுக்களையும் கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, அந்த சிசுக்கள் குப்பை தொட்டியில் இருந்ததால், நாய்கள் அதனை கடித்து குதறியுள்ளது என்றும், அதில் ஒரு பெண் சிசுவின் தலையினை காணவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.
தொடர்ந்து, சிசுக்களை இவ்வாறு வீசி சென்றது யார்? என்றும், குப்பைத்தொட்டி அருகே ஏதேனும் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளதா? அதில் சிசுக்களை வீசியவர்கள் உருவம் பதிவாகியுள்ளதா? என்றும் காவல்துறை ஆய்வினை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் இந்த குழந்தைகள் முறையற்ற உறவில் பிறந்ததால் இவ்வாறு குப்பைத்தொட்டியில் வீசப்பட்டனவா? என்ற கோணத்திலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது.